கரோனா தொற்று காரணமாக உயிரிழப்போரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துவரும் நிலையில், நாட்டின் தலைநகர் தில்லியிலுள்ள மயானம் இறந்தோரின் உடல்களை எரியூட்ட முடியாமல் திணறிக் கொண்டிருக்கிறது.
கரோனா தொற்றால் நாட்டில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2.36 லட்சமாக உயர்ந்துவிட்ட நிலையில், உயிரிழப்பும் 6649 ஆக அதிகரித்துள்ளது.
தில்லியில் யமுனை ஆற்றங்கரையிலுள்ள நிகாம்போத் படித்துறை மயானத்தில் கரோனாவால் உயிரிழந்தோரின் உடல்களைக் கையாளத் தகுந்த நபர்கள் இல்லாததால் உடல்களை எரியூட்ட நேரமாகிறது.
இதனால், இந்த மயானத்தின் வாசலில் இறந்தோரின் சடலங்களுடன் ஆம்புலன்ஸ்கள் நீண்ட வரிசையில் காத்திருக்க நேரிடுகின்றன. சடலங்களை மயானத்துக்கு எடுத்துவரும் ஆம்புலன்ஸ் வாகனங்களுக்கு ரூ. 20 ஆயிரம் வரை தர நேரிடுகிறது.
ஒவ்வொரு சடலமும் எடுத்துவரப்பட்டவுடன் டோக்கன் எண்கள் வழங்கப்படுகின்றன. பின்னர், ஏற்கெனவே வந்துள்ள சடலங்கள் எரியூட்டிய பின், அழைக்கப்படும் வரை காத்திருக்க வேண்டியிருக்கிறது.
சில நேரங்களில் 5 மணி நேரத்துக்கும் மேலாகக்கூட காத்திருக்க நேரிடுகிறது.
கடந்த வாரத்தில் ஒரு நாள், இந்த மயானத்தில் மின்சாரம் மூலம் எரியூட்டும் சாதனம் பழுதாகிவிட்டதால் 8 சடலங்களை மீண்டும் மருத்துவமனைகளுக்கே அனுப்ப நேரிட்டிருக்கிறது.
இதைத் தொடர்ந்து, வழக்கமான முறையில் மரக் கட்டைகளை வைத்து சடலங்கள் எரியூட்டப்படுகின்றன. ஒரு நாளில் சுமார் 20-க்கும் அதிகமான சடலங்கள் எரியூட்டப்படுகின்றன.
இறந்த பிறகும்கூட நிம்மதியாகச் சென்றடைய முடியாத நிலைமையேற்பட்டிருக்கிறது இப்போது தில்லியிலும் கரோனாவால்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.