தற்போதைய செய்திகள்

பணியின்போது உயிரிழந்த தூய்மைப் பணியாளர்: நிர்கதியாகத் தவிக்கும் குடும்பம்

அ. ராஜு சாஸ்திரி

பவானி: உலகமே எதிர்கொள்ள அஞ்சிக் கொண்டிருக்கும் இந்தக் கரோனா காலத்தில் தூய்மைப் பணியில் ஈடுபட்டிருந்த தூய்மைப் பணியாளர் ஒருவர் எதிர்பாராமல் உயிரிழந்த நிலையில், அவர் தினக்கூலி என்ற காரணத்தால்,  எவ்வித உதவியுமின்றித் தற்போது அவர் குடும்பமே பரிதவித்து நிற்கிறது.

ஈரோடு மாவட்டத்தின் வடக்கு எல்லையோர கிராமம் நெரிஞ்சிப்பேட்டை. பேரூராட்சியான இங்கு 4 நிரந்தர தூய்மைப் பணியாளர்களும் சுய உதவிக் குழு சார்பில் 11 தூய்மைப் பணியாளர்கள் தினக்கூலி அடிப்படையிலும் பணியாற்றி வருகின்றனர்.

இவ்வாறு தினக்கூலி அடிப்படையில் பணியாற்றிவந்த தூய்மைப் பணியாளர்தான் பாலன் (46). நெருஞ்சிப்பேட்டை காலனியைச் சேர்ந்தவர். இவரது மனைவி தங்கமணி (40). இவருக்கு எட்டாம் வகுப்பு படிக்கும் தீனா (13), ஐந்தாம் வகுப்பு படிக்கும் சுஜித் (10) என இரு மகன்கள் உள்ளனர். இவரது தாய் மாரியம்மாள் (70) உடன் வசித்து வருகிறார்.

தூய்மைப் பணியாளர் பாலன்.

கடந்த 13 ஆண்டுகளாக நெருஞ்சிப்பேட்டை பேரூராட்சியில் ஒப்பந்தத் தொழிலாளராகவே தூய்மைப் பணியில் ஈடுபட்டு வந்தவர் பாலன். இவரது வருமானத்தை மட்டும் நம்பியே நான்கு பேர் வாழ்ந்து வருகின்றனர்.

இந்த நிலையில் கடந்த 6 ஆம் தேதி அதிகாலை வழக்கம்போல் தூய்மைப் பணிக்கு பாலன் புறப்பட்டுச் சென்றார். பவானி - மேட்டூர் சாலையில் நெரிஞ்சிப்பேட்டை, அங்காளம்மன் கோயில் தெருவில் தூய்மைப் பணியில் ஈடுபட்டிருந்தபோது திடீரென மாரடைப்பு ஏற்பட மயங்கி விழுந்தார்.

இதைக் கண்ட சக தொழிலாளர்கள் அவரைப் பேரூராட்சிக் குப்பை வண்டியிலேயே ஏற்றிக்கொண்டு அம்மாபேட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு சிகிச்சைக்கு கொண்டு சென்றனர். அங்கு நிறுத்தப்பட்டிருந்த 108  ஆம்புலன்ஸ் வாகனத்தில் இருந்த பணியாளர்கள் பாலனைப்  பரிசோதித்தனர். இதில் பாலன் ஏற்கெனவே இறந்துவிட்டிருந்தது தெரியவந்தது.

இந்தத் தகவல், தூய்மைப் பணியாளர்கள் மத்தியில் பரவியதும் பரபரப்பு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து பேரூராட்சிக்கு சொந்தமான குப்பை சேகரிக்கும் வாகனத்திலேயே பாலனின் சடலம் ஏற்றப்பட்டு நெரிஞ்சிப்பேட்டையில் உள்ள அவரது வீட்டுக்குக் கொண்டு செல்லப்பட்டது.

பேரூராட்சி நிர்வாகத்தின் சார்பில் பாலனின் உடலுக்கு மரியாதை செலுத்தப்பட்டது. உயிரிழந்த பாலனின் குடும்பத்துக்கு சின்னஞ்சிறு உதவிகள் செய்யப்பட்டன.  ஆனால், கணவனை இழந்து தவிக்கும் மனைவிக்கும் தந்தையை இழந்து தவிக்கும் மகன்களுக்கும் எதிர்காலம் கேள்விக்குறியாக உள்ளது.

ஓடு இல்லாத பாலன் வீடு.

கடந்த இரு வாரங்களுக்கு முன்பு வீசிய பலத்த காற்றால் இவரது ஓட்டு வீட்டின் ஒரு பகுதி சேதமடைந்தது. இதனால் இவரது வீட்டுக்குள் வெயிலும், மழையும் கேட்காமல் வந்து செல்லும் நிலை உள்ளது.

கடந்த 13 ஆண்டுகளாகத்  தினக்கூலித் தூய்மைப் பணியாளராகவே வேலை செய்த பாலனின் குடும்பம் தற்போது நிர்கதியாக நிற்கிறது. தாய் மாரியம்மாள், மனைவி தங்கமணி உள்பட நால்வர் வாழ வழியின்றித் திகைத்து நிற்கின்றனர். பள்ளிப் பருவத்தில் இருக்கும் மகன்களின் நிலை மிகவும் பரிதாபம்.

பேரூராட்சி நிர்வாகத்துக்கும் பாலனுக்கும் எவ்வித தொடர்புமில்லை, அவர் தனிப்பட்ட தினக்கூலித் தொழிலாளிதான். அரசு சார்பில் எதுவும் செய்ய வழியில்லை என்று பேரூராட்சி வட்டாரங்கள் கைவிரிக்கின்றன. 

இவர்களுக்கு அரசு மற்றும் தன்னார்வலர்கள் ஏதேனும் உதவி செய்ய  வேண்டும் என்று பாலனுடைய உறவினர்கள் கேட்டுக்கொண்டனர். உதவி செய்ய விரும்புபவர்கள் 8760411270 என்ற செல்லிடப்பேசி எண்ணில் தொடர்புகொள்ளலாம்.

நாடு முழுவதும் கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க போர்வீரர்களாகச் செயல்படும் மருத்துவர்கள், தூய்மைப் பணியாளர்கள் என அனைவரும் பாராட்டப்படுகின்றனர். இவர்களின் பணிக்கு பாராட்டுத் தெரிவிக்கும் வகையில் நாடே கை தட்டியும் விளக்கேற்றியும் மலர் தூவியும் மகிழ்ச்சி தெரிவிக்கிறது.

ஆனால், இதே காலகட்டத்தில் ஏதோ ஒரு கிராமத்தில் தூய்மைப் பணியில் ஈடுபட்டிருந்த தூய்மைப் பணியாளர், பணி நேரத்திலேயே உயிரிழந்த நிலையில், தினக் கூலித் தொழிலாளர்தான் என்ற ஒரே காரணத்தால் எவ்வித உதவியுமின்றி, தற்போது அவருடைய குடும்பமே தவித்து நிற்கிறது.

பாலன் குடும்பத்தினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

12 ராசிக்குமான தினப்பலன்!

திருப்பருத்திக்குன்றத்தில் மகாவீரா் ஜெயந்தி

திமுக சாா்பில் நீா்மோா் பந்தல் திறப்பு

பாதுகாக்கப்பட்ட குடிநீா் வழங்க நூதன முறையில் கோரிக்கை

போலி மருத்துவா் கைது

SCROLL FOR NEXT