லடாக்கில் உயிரிழந்த ராணுவ வீரர் குடும்பத்துக்கு அமைச்சர் கடம்பூர் ராஜு, கனிமொழி உதவி
காஷ்மீரில் லடாக் பகுதியில் உயிரிழந்த தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி திட்டங்குளத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் கருப்பசாமியின் வீட்டுக்குச் சென்று அமைச்சர் கடம்பூர் ராஜு, கனிமொழி ஆகியோர் நேரில் சென்றனர்.
காஷ்மீரில் லடாக் பகுதியில் உயிரிழந்த தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி திட்டங்குளத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் கருப்பசாமியின் வீட்டுக்குச் சென்று செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் ராஜு, மாவட்ட ஆட்சியர் செந்தில் ராஜ் ஆகியோர் அவரது குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவித்தனர்.
மேலும், ராணுவ வீரரின் குடும்பத்துக்கு அமைச்சர் கடம்பூர் ராஜு, தன்னுடைய சொந்த நிதியிலிருந்து ரூபாய் 5 லட்சம் நிதியுதவி வழங்கினார். கருப்பசாமி குழந்தைகளின் கல்விக்கும் அவரது மனைவி தமயந்தியின் வேலைவாய்ப்புக்கும் அரசுத் தரப்பில் முழு உதவி செய்யப்படும் என்றார்.
மேலும், ராணுவ வீரர் கருப்பசாமியின் வீட்டுக்கு திமுக தலைவர்களில் ஒருவரும் எம்.பி.யுமான கனிமொழியும் நேரில் சென்று அவரது குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவித்து ரூபாய் 2 லட்சம் நிதியுதவி வழங்கினார். எம்எல்ஏ கீதா ஜீவன் உள்பட கட்சியினர் உடனிருந்தனர்.
ராணுவத்தில் நாயக் பொறுப்பில் பணியாற்றி வந்த கருப்பசாமி காஷ்மீர் மாநிலத்தில் லடாக் பகுதியில் பணியிலிருந்த போது நேற்று முன்தினம் நள்ளிரவு அப்பகுதியில் பனி மலையில் நிகழ்ந்த வாகன விபத்தில் உயிரிழந்தார்.
கருப்பசாமி வயது 32 இவருக்கு திருமணமாகி தமயந்தி என்ற மனைவியும், கன்னிகா வயது 7, வைஷ்ணவி வயது 4, பிரதீப் குமார் வயது 1 ஆகிய மூன்று குழந்தைகள் உள்ளனர்.
உயிரிழந்த ராணுவ வீரர் கருப்பசாமியின் உடல் நாளை திட்டங்குளம் கொண்டுவரப்பட்டு ராணுவ மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட உள்ளது.