தற்போதைய செய்திகள்

ரூ.10-க்கு பிரியாணி: கூட்டத்தைக் கட்டுப்படுத்த காவல் துறையினர் தடியடி

DIN

அருப்புக்கோட்டை: விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் கரோனா ஊரடங்கு விதிமுறைகளை மீறி புதிதாக திறக்கப்பட்ட ஓட்டலின் சலுகைக்காகக் குவிந்த கூட்டத்தைக் கட்டுப்படுத்த காவல் துறையினர் தடியடி நடத்தியதால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

அருப்புக்கோட்டையிலிருந்து திருச்சுழி செல்லும் சாலையில் புதிதாக ஒரு உணவகத்தின் அறிமுக விழா இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்றது. அப்போது சலுகைக் கட்டணமாக வெறும் ரூபாய் 10க்கு மதிய உணவான பிரியாணியை உணவகம் அறிவித்திருந்தது. இதனால் அவ்வுணவகத்தில் பிரியாணி வாங்க காலை 10.30 மணிக்கே சுமார் 50 பேர் வரிசையில் காத்திருந்தனர். பின்னர் சிறிது நேரத்தில் பிரியாணி விற்பனை விநியோகம் தொடங்கியது. தொடர்ந்து,

நேரம் செல்லச் செல்ல நீண்ட வரிசையில் காத்திருந்த வாடிக்கையாளர்கள் பொறுமையின்றி செயல்பட்டு ஓட்டலின் வாயிலில் மொத்தமாகக் குவிந்தனர். அக்கூட்டம் பிரதானச் சாலையையும் ஆக்கிரமித்ததால் போக்குவரத்திற்கு இடையூறாகி பேருந்துகள் உள்ளிட்ட வாகனங்கள் செல்ல வழியின்றி தடை ஏற்பட்டது.

இதனால் கூட்டத்தைக் கட்டுப்படுத்த இயலாமல் தவித்த உணவகத் தரப்பிலிருந்தும், போக்குவரத்துத் தடையால் வாகன ஓட்டிகள் தரப்பிலிருந்தும் காவல்துறைக்குத் தகவல் அளிக்கப்பட்டது. உடனடியாக நிகழ்விடத்திற்கு வந்த நகர் காவல் ஆய்வாளர் பாலமுருகன் தலைமையிலான காவல் துறையினர் கூட்டத்தைக் கலைக்க முடியாததால், வேறுவழியின்றி தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர்.

பின்னர் ஊரடங்கு விதிமுறையை மீறி ஒரே இடத்தில் சமூக இடைவெளியைப் பின்பற்றாமல் கூட்டம் சேரவோ, முகக்கவசம் அணிதலை பின்பற்றாமல் இருந்தாலோ கடும் நடவடிக்கையுடன் அபராதமும் விதிக்கப்படும் என வாடிக்கையாளர்களான பொதுமக்களுக்கும், உணவக உரிமையாளருக்கும் காவல் துறையினர் எச்சரிக்கை விடுத்தனர்.

திடீரென திருச்சுழி செல்லும் சாலையில் கூடிய கூட்டத்தைக் கலைக்க காவல் துறையினர் தடியடி நடத்தியதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆப்பிளின் புதிய ஐபேட் விலை எவ்வளவு தெரியுமா?

மிட்செல் மார்ஷ் உலகக் கோப்பைக்குத் தயாரா? பயிற்சியாளர் கொடுத்த அப்டேட்!

ஜேக் ஃப்ரேசர், அபிஷேக் போரெல் அசத்தல்; ராஜஸ்தானுக்கு 222 ரன்கள் இலக்கு!

பிளஸ் 2 துணைத்தேர்வு: மே 16 முதல் விண்ணப்பிக்கலாம்

அஸ்ஸாம்- 75.01; மகாராஷ்டிரம்- 53.95.. : 3-ம் கட்ட வாக்குப்பதிவு சதவிகிதம்!

SCROLL FOR NEXT