ஜெயலலிதா பல்கலைக்கழக எல்லை வரையறையை மீறி திருவள்ளுவர் பல்கலைக்கழகம் வெளியிட்ட அறிவிப்பு ரத்து
ஜெயலலிதா பல்கலைக்கழக அதிகார வரம்புக்குட்பட்ட பகுதியில் கல்வி மையத்தின் மூலம் முதுகலை படிப்புகளுக்கு விண்ணப்பங்களை வரவேற்று வேலூர் திருவள்ளுவர் பல்கலைக்கழகம் வெளியிட்ட அறிவிப்பை ரத்து
சென்னை: விழுப்புரம் டாக்டர் ஜெ.ஜெயலலிதா பல்கலைக்கழக அதிகார வரம்புக்குட்பட்ட பகுதியில் கல்வி மையத்தின் மூலம் முதுகலை படிப்புகளுக்கு விண்ணப்பங்களை வரவேற்று வேலூர் திருவள்ளுவர் பல்கலைக்கழகம் வெளியிட்ட அறிவிப்பை ரத்து செய்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயர்நீதிமன்றத்தில், முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தாக்கல் செய்த மனுவில், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்ட மாணவர்கள் நலனுக்காக, வேலூர் திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தை பிரித்து, விழுப்புரத்தை தலையிடமாக கொண்டு டாக்டர்.ஜெ.ஜெயலலிதா பல்கலைக்கழகம் அமைக்கப்பட்டது. இந்த பல்கலைக்கழகத்துக்கு இதுவரை பதிவாளரும், போதுமான பணியாளர்களும் நியமிக்கப்படவில்லை. இதனால் பணிகளில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தின் பதிவாளர் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள முதுகலை கல்வி மையத்தில், முதுகலை படிப்பில் சேர விண்ணப்பங்களை வரவேற்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது சட்டத்தை மீறிய செயல். அந்த அறிவுப்புக்கு தடை விதிக்க வேண்டும். டாக்டர்.ஜெயலலிதா பல்கலைக்கழகத்துக்கு நிதி ஒதுக்கவும், பதிவாளரை நியமிக்கவும் உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தார்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி மற்றும் நீதிபதி பி.டி.ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசுத்தரப்பில் ஆஜரான அரசு தலைமை வழக்குரைஞர் சண்முகசுந்தரம், அண்மையில் அரசின் கட்டுப்பாட்டில் எடுக்கப்பட்ட அண்ணாமலை பல்கலைக்கழகத்துக்கு கல்லூரி இணைப்பு அதிகாரம் வழங்கும் வகையில் சட்டத் திருத்தம் கொண்டு வரவும், ஜெயலலிதா பல்கலைக்கழக சட்டத்தை ரத்து செய்ய முடிவு செய்துள்ளதாக கூறி, அதுதொடர்பான அரசாணையை தாக்கல் செய்தார்.
அப்போது முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் விஜய் நாராயண், தற்போதைய நிலையில், ஜெயலலிதா பல்கலைக்கழக சட்டம் அமலில் உள்ளதால், அதை பின்பற்ற வேண்டும். திருவள்ளுவர் பல்கலைக்கழக அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும் என வாதிட்டார்.
இதனையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், ஜெயலலிதா பல்கலைக்கழக சட்டத்தை ரத்து செய்ய அரசுக்கு அதிகாரம் உள்ள போதும் அதுவரை அந்த சட்டம் அமலில் இருக்கும். எனவே அந்த சட்ட விதிகளை பின்பற்ற வேண்டும். எனவே விழுப்புரம் மையத்தின் மூலம் திருவள்ளுவர் பல்கலைக்கழகம், மாணவர் சேர்க்கை தொடர்பான அறிவிப்பை வெளியிட அதிகாரமில்லை எனக்கூறி அந்த அறிவிப்பை ரத்து செய்து உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.
இந்த விசாரணையின் போது, ஆட்சி என்பது சுழற்சி போல மாறி மாறி வருவது, எனவே முந்தைய ஆட்சியில் கொண்டுவரப்பட்ட சட்டத்தை பின்பற்ற வேண்டும் என நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.