சொத்துக் குவிப்பு வழக்கில் நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனைக்குப் பிறகு சசிகலா இன்று (ஜன. 27) விடுதலையானார்.
சொத்துக் குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்று பெங்களூரு- பரப்பன அக்ரஹாராத்தில் உள்ள மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த சசிகலாவுக்கு இன்றுடன் சிறைத் தண்டனை முடிவடைந்தது.
இதனைத் தொடர்ந்து சசிகலா சிகிச்சை பெற்று வரும் விக்டோரியா மருத்துவமனைக்கு சென்ற சிறைத்துறை அதிகாரிகள் சசிகலாவிடம் கையெழுத்து பெற்று விடுதலையை அறிவித்தனர்.
அபராதத் தொகையான ரூ.10.10 கோடியை செலுத்தியதால், சிறையில் இருந்த நாள்களைக் கணக்கிட்டு சசிகலா தற்போது விடுதலை செய்யப்பட்டுள்ளார். சிறைத்துறை நடவடிக்கைகள் முடிந்ததால் மருத்துவமனையில் இருந்த சசிகலாவிடம் விடுதலை ஆனதற்கான உத்தரவு வழங்கப்பட்டது.
தண்டனைக் காலம் முடிந்தாலும் சசிகலா விக்டோரியா அரசு மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெறுவார் என்று அவரது குடும்பத்தினர் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. பெங்களூருவில் இருந்தவாறே சிகிச்சை பெற்று பிப்ரவரி முதல் வாரத்தில் சசிகலா தமிழகம் திரும்புவார் என்றும் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
கரோனாவால் கடந்த 20-ம் தேதி விக்டோரியா அரசு மருத்துவமனையில் சசிகலா அனுமதிக்கப்பட்டார். அவரை மருத்துவர்கள் கண்காணித்து வரும் நிலையில், சசிகலா உடல் நிலை சீராக உள்ளதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சசிகலாவிற்கு இன்று மீண்டும் கரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. இதில் அவருக்கு 'நெகடிவ்' என தெரியவந்தால், சாதாரண பிரிவுக்கு அவர் மாற்றப்படுவார் என்று மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா, இளவரசி, சுகாகரன் ஆகியோருக்கு 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. சசிகலா விடுதலையைத் தொடர்ந்து இளவரசி, சுகாகரன் ஆகியோரும் விரைவில் விடுதலை செய்யப்படுவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.