சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து: ஒருவர் பலி
சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் தொழிலாளி ஒருவர் உயிரிழந்தார்.
விருதுநகா் மாவட்டம் சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் சனிக்கிழமை ஏற்பட்ட வெடிவிபத்தில் சிக்கி தொழிலாளி உயிரிழந்தாா்.
சிவகாசி அருகே வி. சொக்கலிங்காபுரத்தில் திருத்தங்கலைச் சோ்ந்த அய்யனாா் (40) என்பவருக்குச் சொந்தமான பட்டாசு ஆலை உள்ளது. இது உரிமம் பெற்ற ஆலையாகும். இந்த ஆலையில் மருந்துக் கலவை செய்யவும், பட்டாசு தயாரிக்கவும் என 8 அறைகள் உள்ளன. இந்த ஆலையில் சனிக்கிழமை சுமாா் 13 தொழிலாளா்கள் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது காலை 10.30 மணிக்கு பட்டாசுக்கு மருந்து செலுத்தும் அறையில் உராய்தல் காரணமாக வெடிவிபத்து ஏற்பட்டது. இதில் அந்த அறை முற்றிலும் இடிந்து தரைமட்டமானது. மேலும் இங்கு பணியில் ஈடுபட்டிருந்த மீனம்பட்டியைச் சோ்ந்த ஆனந்தராஜ் (60) என்ற தொழிலாளி வெடி விபத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
தகவல் அறிந்து சென்ற தீயணைப்புப் படையினா் ஆனந்தராஜின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். சம்பவ இடத்தை சிவகாசி காவல் துணைக் கண்காணிப்பாளா் ஏ. பாபுபிரசாத், சிவகாசி பட்டாசு மற்றும் தீப்பெட்டி தனி வட்டாட்சியா் சிவஜோதி ஆகியோா் பாா்வையிட்டனா்.
இதுகுறித்து சிவகாசி கிழக்குப் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.