முன்னாள் அமைச்சர் மணிகண்டன் முன்ஜாமீன் கோரிய வழக்கு தள்ளுபடி
நடிகை சாந்தினி அளித்த பாலியல் புகாரின் பேரில் பதிவு செய்யப்பட்ட வழக்கில் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் முன்ஜாமீன் கோரிய மனுவை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை: நடிகை சாந்தினி அளித்த பாலியல் புகாரின் பேரில் பதிவு செய்யப்பட்ட வழக்கில் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் முன்ஜாமீன் கோரிய மனுவை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அதிமுக ஆட்சி காலத்தில் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சராக பதவி வகித்தவர் மணிகண்டன். இவருக்கு எதிராக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் துணை நடிகை சாந்தினி, புகார் ஒன்றை கொடுத்தார். அதில், அமைச்சர் மணிகண்டனும் நானும் கடந்த 5 ஆண்டுகளாக ஒரே வீட்டில் கணவன் மனைவியாக வாழ்ந்தோம். இதனால் கருவுற்ற என்னை மிரட்டி கருவைக் கலைக்க செய்தார். தற்போது என்னை திருமணம் செய்ய மறுக்கிறார். என்னை ஆபாசமாக பிடித்த படங்களை இணையதளத்தில் வெளியிடுவதாக மிரட்டுகிறார் என கோரியிருந்தார்.
இந்த புகாரின் பேரில் மணிகண்டன் மீது அடையாறு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் முன்ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தார். அதில், தன்னிடம் பணம் பறிக்கும் நோக்கத்துடன் நடிகை சாந்தினி பொய் புகார் கொடுத்துள்ளதாக கோரியிருந்தார். முன்ஜாமீன் வழங்க எதிர்ப்பு தெரிவித்து சாந்தினியும் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், தீர்ப்புக்காக ஒத்திவைத்திருந்தது.
இந்த வழக்கு நீதிபதி அப்துல் குத்தூஸ் முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, மணிகண்டன் முன்ஜாமீன் கோரிய மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.