திருப்பூரில் அனைத்து தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
திருப்பூரில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து தொழிற்சங்கத்தினர் சனிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்பூர்: திருப்பூரில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து தொழிற்சங்கத்தினர் சனிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்பூர் குமரன் சிலை முன்பாக அனைத்து தொழிலாளர் சங்கத்தினர் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், பங்கேற்ற தொழிற்சங்கத்தினர் கூறியதாவது: தில்லியில் வேளாண் சட்ட திருத்த மசோதாவைத் திரும்பப்பெறக்கோரி 200 நாள்களுக்கும் மேலாக விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஆகவே, அவர்களது கோரிக்கையை ஏற்று மத்திய அரசு மூன்று வேளாண் திருத்தச் சட்டமசோதாக்களையும் திரும்பப்பெற வேண்டும்.
மேலும், நான்கு தொழிலாளர் சட்ட தொகுப்புகள், மின்சார சட்ட திருத்த மசோதா ஆகியவற்றையும் திரும்பப்பெற வேண்டும். விவசாய விலை பொருள்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலையை சட்டப்பூர்வமாக உறுதிப்படுத்த வேண்டும்.
குறிப்பிட்ட காலத்துக்குள் இந்தியாவில் உள்ள அனைவருக்கும் கட்டணமின்றி இரு தவணை கரோனா தடுப்பூசி செலுத்த வேண்டும்.
வருமான வரி கட்டும் அளவுக்கு வருவாய் இல்லாத அனைத்து ஏழைக்குடும்பத்தினருக்கும் மாதம் ரூ.7,500 நிவாரணத் தொகையும், 10 கிலோ உணவுப் பொருள்களும் வழங்க வேண்டும்.
தமிழகத்தில் உள்ள அனைத்து முன்களப் பணியாளர்களுக்கும் ரூ.50 லட்சம் காப்பீடு செய்வதுடன், கரோனா நோய்த்தொற்றால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு உரிய நிவாரணத் தொகைகளை வழங்க வேண்டும் என்றனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில், ஏஐடியூசி, சிஐடியூ, எல்பிஎஃப், எம்எல்எஃப், ஐஎன்டியூசி உள்ளிட்ட பல்வேறு தொழிற்சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர்.