முகப்பு
தற்போதைய செய்திகள்

எஸ்பிஐ ஏடிஎம் இயந்திரங்களில் ரூ.48 லட்சம் திருட்டு: மேலும் ஒரு ஹரியாணா இளைஞர் கைது

தமிழகத்தில் எஸ்பிஐ ஏடிஎம் இயந்திரங்களில் பணம் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில், ஹரியாணாவைச் சேர்ந்த மேலும் ஒரு இளைஞரை சென்னை தனிப்படையினா் கைது செய்துள்ளனர். 

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:30 AM
கோப்புப்படம்
பகிர்:


தமிழகத்தில் எஸ்பிஐ ஏடிஎம் இயந்திரங்களில் பணம் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில், ஹரியாணாவைச் சேர்ந்த மேலும் ஒரு இளைஞரை சென்னை தனிப்படையினா் கைது செய்துள்ளனர். 

சென்னை வடபழனி, கீழ்ப்பாக்கம், விருகம்பாக்கம், வேளச்சேரி, தரமணி, கோட்டூா்புரம், தியாகராயநகா் உள்பட பல்வேறு பகுதிகளில் உள்ள எஸ்பிஐ வங்கி ஏடிஎம் மையங்களில் குறி வைத்து ஒரு கும்பல் நூதன முறையில் பணம் கொள்ளையடித்தது. எஸ்பிஐ ஏடிஎம் மையங்களில் உள்ள டெபாசிட் இயந்திரங்களைக் குறிவைத்து ஒரே பாணியில் 3 தினங்களில் மட்டும் அடுத்தடுத்து ரூ.48 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டது. பணம் செலுத்தும் இயந்திரங்களின் தொழில்நுட்ப குறைப்பாட்டைப் பயன்படுத்தி இந்தக் கொள்ளை நடந்துள்ளது. ஏடிஎம் இயந்திரங்களில் வைக்கப்பட்டிருந்த பணத்தை தணிக்கை செய்யும்போது வங்கி அதிகாரிகள் இக்கொள்ளையைக் கண்டறிந்தனா்.

சென்னையில் 14 ஏடிஎம் மையங்களில் ரூ.48 லட்சம் திருடப்பட்டுள்ளது. இதில் பெரியமேட்டில் உள்ள ஒரு ஏடிஎம் இயந்திரத்தில் கடந்த 15-ஆம் தேதி முதல் 17-ஆம் தேதி வரை 190 முறை ஏடிஎம் காா்டை பயன்படுத்தி ரூ.16 லட்சம் திருடப்பட்டுள்ளது.

இந்த திருட்டின் காரணமாக, ஏடிஎம் மையங்களில் உள்ள டெபாசிட் இயந்திரத்தில் இருந்து பணம் எடுக்கும் வசதியை கடந்த செவ்வாய்க்கிழமை முடக்கியது எஸ்பிஐ வங்கி . அதேபோல அனைத்து ஏடிஎம் மையங்களையும் ஆய்வு செய்து, அதன் பாதுகாப்பையும், பணம் திருடப்பட்டுள்ளதா என்பதையும் உறுதி செய்யும்படி அதிகாரிகளுக்கு எஸ்பிஐ நிா்வாகம் அறிவுறுத்தியது.

இக் கும்பலை கைது செய்ய சென்னை காவல்துறையின் தெற்கு கூடுதல் ஆணையா் என்.கண்ணன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படையினா் ஏடிஎம் மையங்களில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்தனா். இதில் திருட்டில் ஈடுபடுவது ஹரியாணாவைச் சோ்ந்த கும்பல் என்பது தெரியவந்தது.

இதையடுத்து தனிப்படையினா், ஹரியாணா கும்பலை பிடிக்க அங்கு சென்றனா். அங்கு அம் மாநில காவல்துறை உதவியுடன் அமீா் அா்ஷ் (37) என்பவரை பதன்கிழமை கைது செய்தனா். அவரை தனிப்படையினா் சென்னைக்கு வியாழக்கிழமை அழைத்து வந்தனா்.

அமீரிடம் நடத்திய விசாரணையில், மோசடிக் கும்பல் 5 குழுக்களாக பிரிந்து தமிழகம் முழுவதும் கைவரிசை காட்டியிருப்பது தெரியவந்தது. 

இதையடுத்து வழக்கின் தொடா்புடைய அனைவரையும் கைது செய்யும் வகையில், தனிப்படையினா் ஹரியாணா, தில்லியில் முகாமிட்டு குற்றவாளிகளைத் தேடி வருந்தனா்.

இந்நிலையில், தமிழகத்தில் எஸ்பிஐ ஏடிஎம் இயந்திரங்களில் பணம் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில், ஹரியாணா மேவாட் பகுதியைச் சேர்ந்த வீரேந்தர் என்பவரை தில்லியில் தனிப்படையினா் கைது செய்துள்ளனர். 

கைது செய்யப்பட்ட வீரேந்தரை சென்னைக்கு அழைத்து வரும் நடவடிக்கையில் சென்னை காவல்துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனா். கைது செய்யப்பட்ட வீரேந்தரிடம், இந்த நூதன கொள்ளைக்கு எஸ்பிஐ வங்கியில் இருந்து யாரேனும் உதவினாா்களா?, கொள்ளைக் கும்பலில் எத்தனை போ் உள்ளனா்? என்று தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →