தற்போதைய செய்திகள்

ஒருவர் கூட பசியால் வாடவில்லை என்கிற நிலையை உருவாக்க வேண்டும்: முதல்வர் மு.க.ஸ்டாலின்

DIN


தமிழ்நாட்டில் ஒருவர்கூட பசியால் வாடவில்லை என்கிற நிலையை உருவாக்குவதையே எனக்கு அளிக்கப்படும் சிறப்பான வரவேற்பாகக் கருதுகிறேன் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் கூறியிருப்பதாவது: 

தமிழகத்தை கரோனா இரண்டாவது அலையின் தாக்கத்திலிருந்து மீட்பதற்காக, தளர்வுகளற்ற முழு ஊரடங்கு மேலும் ஒருவார காலத்திற்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. கடந்த ஒருவார கால ஊரடங்கினால் நோய்த்தொற்று எண்ணிக்கை ஓரளவு குறைந்து வருவதைக் காண்கிறோம். இது மேலும் குறைந்து, நோய்த் தொற்று வரைபடம் தட்டையான நிலையை எட்டிட வேண்டும் என்பதற்காகத்தான் ஊரடங்கு நீட்டிப்பு செய்யப்பட்டிருக்கிறது.

பொதுமக்களின் முழுமையான ஒத்துழைப்பின்றி, நோய்த் தொற்று சங்கிலியைத் துண்டித்திட முடியாது. எனவே, ஊரடங்கால் மக்களுக்கு ஏற்படும் இடர்பாடுகளைக் கருத்தில்கொண்டு 13 மளிகைப் பொருட்கள் அடங்கிய தொகுப்பு ஒவ்வொரு குடும்ப அட்டைதாரருக்கும் வழங்கப்பட இருக்கிறது. மேலும், மளிகை - காய்கறி - பழங்கள் ஆகியவை வீட்டருகே விற்பனை செய்வதற்கான ஏற்பாடுகளும் மேம்படுத்தப்பட்டு, பொதுமக்கள் யாரும் தேவையின்றி வெளியே வருவதற்கு அவசியமற்ற நிலையை உருவாக்குவதில் அரசு முழு முனைப்புடன் செயலாற்றி வருகிறது.

இதன் காரணமாக, சென்னை உள்பட தமிழ்நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் தொற்று எண்ணிக்கை குறைந்து வரும் நிலையில், கோவை மற்றும் அதனைச் சுற்றியுள்ள மாவட்டங்களில் எண்ணிக்கை அதிகரிப்பதைக் கவலையுடன் கவனத்தில் கொண்டு, அதனைக் கட்டுப்படுத்துவதற்கான சிறப்பு ஏற்பாடுகளை மருத்துவக் குழுவினர் மேற்கொண்டு வருகின்றனர்.

அதனை விரைவுபடுத்திடவும், அவர்களுடன் ஆலோசித்து நோய்த் தொற்றைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்திடவும் நாளை (மே 30) கோவைக்கு நேரடிப் பயணம் மேற்கொள்ள இருக்கிறேன். இது முழுக்க முழுக்க அரசு முறைப் பயணமாகும். அதுவும் அவசரகாலத் தேவையைக் கருத்திற்கொண்டு மேற்கொள்ளப்படுகிற பயணம் என்பதால், நம்முடைய கழக நிர்வாகிகள் யாரும் என்னை நேரில் வரவேற்பதற்கும் சந்திப்பதற்கும் ஆர்வம் காட்ட வேண்டாம் என அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

கரோனா கட்டுப்பாட்டுக்கானப் பணிகளைக் கவனித்திட நியமிக்கப்பட்டிருக்கும் அமைச்சர்கள் தவிர மற்றவர்கள் வர வேண்டாம். வரவேற்பு ஏற்பாடுகளையும் முற்றிலுமாகத் தவிர்த்திடக் கோருகிறேன். என் மீது தாங்கள் காட்டுகிற அன்பினை வரவேற்பு பதாகைகள் வாயிலாக வெளிப்படுத்தாமல், ஏற்கனவே நான் கேட்டுக்கொண்டதுபோல, ஊரடங்கு காலத்தில் உணவுக்கு யாரும் பரிதவிக்காத வகையில், ‘ஒன்றிணைவோம் வா’ செயல்பாட்டின் அடிப்படையில் அவர்களின் பசியினைப் போக்கிடும் உன்னதப் பணியில் தொடர்ந்து ஈடுபட வேண்டுகிறேன்.

கடந்த ஒரு வாரத்தில் திமுகவினர் இந்தப் பணியைத் தமிழகத்தின் பல இடங்களிலும் மேற்கொண்டுள்ளனர். அதுபோலவே, மேலும் ஒருவார காலம் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழகம் தழுவிய அளவிலும் குறிப்பாக கோவை, ஈரோடு, திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களிலும் உணவு வழங்கும் பணியை மேற்கொண்டு, தமிழ்நாட்டில் ஒருவர்கூட பசியால் வாடவில்லை என்கிற நிலையை உருவாக்குவதையே எனக்கு அளிக்கப்படும் சிறப்பான வரவேற்பாகக் கருதுகிறேன்.” என ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் நுழைவுத் தோ்வு: ஒருங்கிணைந்த வேலூரில் 6,787 போ் எழுதினா் விண்ணப்பித்தவா்களில் 255 போ் எழுதவில்லை

மரக்கன்றுகள் நடல்

கோடை சாகுபடிக்கு போதிய மின்சாரம் வழங்க வலியுறுத்தல்

தென்னை விவசாயிகளுக்கு நஷ்ட ஈடு: ஜி.கே.வாசன் கோரிக்கை

ராஜஸ்தானில் ‘நீட்’ தோ்வில் ஆள்மாறாட்டம்: எம்பிபிஎஸ் மாணவா், 5 போ் கைது

SCROLL FOR NEXT