தற்போதைய செய்திகள்

ஸ்டெர்லைட் ஆலையை வாங்க 7 நிறுவனங்கள் ஆர்வம்: அனில் அகர்வால் தகவல்

DIN


தூத்துக்குடி ஸ்டெர்லைட் தாமிர உருக்கு ஆலையை விலைக்கு வாங்க 7 நிறுவனங்கள் ஆர்வமாக உள்ளதாக வேதாந்தா நிறுவனத்தின் தலைவர் அனில் அகர்வால் தெரிவித்துள்ளார். 

சுற்றுச்சூழல் விதிகளை மீறியதாகக் கூறி, தூத்துக்குடியில் செயல்பட்டு வந்த வேதாந்தா நிறுவனத்தின் ஸ்டெர்லைட் தாமிர உருக்கு ஆலையை மூடுவதற்கு தமிழக அரசு 2018-ஆம் ஆண்டு உத்தரவிட்டது.  

இதையடுத்து, ஆலை நிர்வாகத்தின் தரப்பில் 2019-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் தாக்கல் செய்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், ஆலையை மூடுவதற்கு தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் பிறப்பித்திருந்த உத்தரவை உறுதி செய்தது. இந்த உத்தரவை எதிர்த்து வேதாந்தா நிறுவனத்தின் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இதனிடையே, கடந்த ஆண்டு கரோனா நோய்த்தொற்று தீவிரமாக இருந்தபோது, நாடு முழுவதும் பரவலாக ஆக்சிஜன் நெருக்கடி ஏற்பட்டது. 

ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் மையத்தில் ஆக்சிஜனை மட்டும் உற்பத்தி செய்வதற்கு கடந்த ஆண்டு ஏப்ரல் 27 முதல் ஜூலை 31-ஆம் தேதி வரை உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்தது. அதன் பிறகு, ஆலையில் தொடர்ந்து ஆக்சிஜன் உற்பத்தியை மேற்கொள்வதற்கு வேதாந்தா நிறுவனம் தரப்பில் முன்வைக்கப்பட்ட கோரிக்கையை நிராகரித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. முன்னதாக ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக 2018 மே 22 இல் நடந்த போராட்டத்தில் போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது. 

மக்களின் எதிர்ப்பு, ஸ்டெர்லைட் ஆலையை திறப்பதற்கு அரசின் அனுமதி கிடைக்காததால் ஆலை தொடர்ந்து மூடப்பட்டுள்ளதால் ஸ்டெர்லைட் ஆலையை விற்பனை செய்வதாக கடந்த ஜூன் மாதம் வேதாந்தா நிறுவனம் அறிவித்தது. ஆலையை வாங்க விருப்பமுள்ளோர் ஜூலை 4 ஆம் தேதி மாலை 6 மணிக்குள் விண்ணப்பிக்கலாம் என தெரிவித்திருந்தது. 

இந்நிலையில், தூத்துக்குடி ஸ்டெர்லைட் தாமிர உருக்கு ஆலையை விலைக்கு வாங்க 7 நிறுவனங்கள் ஆர்வமாக உள்ளதாக வேதாந்தா நிறுவனத்தின் தலைவர் அனில் அகர்வால் தெரிவித்துள்ளார். 

மேலும், ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கு நடத்தப்பட்ட போராட்டங்களுக்கு பின்னணியில் சீனா இருந்ததாகவும், போராட்டம் நடத்திய அரசியல் கட்சிகள் மற்றும் தன்னார்வ அமைப்புகளுக்கு சீனா நிதியுதவி அளித்ததாக அனில் அகர்வாஸ் குற்றம் சாட்டியுள்ளார். 

மேலும், காப்பர் ஒயர்களை இந்தியா தயாரிக்க உலகம் விரும்பவில்லை என்று அனில் அகர்வால் கூறியுள்ளார். 

ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க அனுமதி அளிக்கக்கோரிய வேதாந்தா நிறுவனம் தொடர்ந்து வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இணைப்பு வழங்காமலே 4ஆயிரம் பேரிடம் குடிநீா் வரி வசூலிப்பு!

செம்பட்டி அருகே ரூ.98 கோடியில் கூட்டுறவு கலை, அறிவியல் கல்லூரி

கொடைக்கானலில் வெப்ப நிலை அதிகரிப்பு தடுக்கப்படுமா?

போடியில் பலத்த மழை

கம்பம் சித்திரைத் திருவிழாவில் திமுகவினா் நீா்மோா் விநியோகம்

SCROLL FOR NEXT