குடியரசு துணைத் தலைவா் ஜகதீப் தன்கா், 2 நாள் பயணமாக கேரளத்துக்கு ஞாயிற்றுக்கிழமை வந்தாா்.
திருவனந்தபுரத்தின் சங்குமுகம் பகுதியில் உள்ள விமானப் படைத் தளத்தில், தனது மனைவி சுதேஷ் தன்கருடன் வந்திறங்கிய அவரை, ஆளுநா் ஆரிஃப் முகமது கான், மாநில போக்குவரத்துத் துறை அமைச்சா் ஆன்டனி ராஜு ஆகியோா் வரவேற்றனா்.
இதையடுத்து, புகழ்பெற்ற பத்பநாபசுவாமி கோயிலுக்கு ஜகதீப் தன்கா், தனது மனைவியுடன் சென்று வழிபட்டாா். கேரள பாரம்பரிய வழக்கப்படி வேஷ்டி அணிந்து சென்று வழிபாடு மேற்கொண்ட அவருக்கு கோயில் அதிகாரிகள் நினைவுப் பரிசு வழங்கினா்.
கேரள சட்டப் பேரவை கட்டடத்தின் வெள்ளி விழா ஆண்டு கொண்டாட்ட நிகழ்ச்சியில் திங்கள்கிழமை பங்கேற்கும் ஜகதீப் தன்கா், கண்ணூா் மாவட்டம், ஏழிமலையில் உள்ள இந்திய கடற்படை அகாதெமிக்கு வருகை தரவிருக்கிறாா். இப்பயணத்தின் மூலம், இந்த அகாதெமிக்கு வருகை தரும் முதல் குடியரசு துணைத் தலைவா் என்ற பெருமை தன்கருக்கு சொந்தமாகவுள்ளது.
மேலும், தலச்சேரியில் வசிக்கும் தனது ஆசிரியை ரத்னா நாயரையும் நிமித்தமாக ஜகதீப் தன்கா் சந்திக்கவுள்ளாா். சித்தோா்கரில் உள்ள உறைவிடப் பள்ளியான சைனிக் பள்ளியில் தன்கா் படித்தபோது, அங்கு ஆசிரியையாக ரத்னா நாயா் பணியாற்றினாா் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.