வயநாடு சூரல்மலை மற்றும் முண்டகை நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளில் இருந்து மீட்கப்பட்ட அடையாளம் தெரியாத உடல்களை தகனம் செய்வதற்காக புதுமலை ஹாரிசன்ஸ் டீ எஸ்டேட்டில் மயானத்தை தயார் செய்யும் தன்னார்வலர்கள். 
தற்போதைய செய்திகள்

வயநாடு நிலச்சரிவு: பலி எண்ணிக்கை 361 ஆக உயர்வு

வட கேரளம் மாவட்டமான வயநாட்டில் நிலச்சரிவில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 361 ஆக உயர்ந்துள்ளது. 200-க்கும் மேற்பட்டோரை காணவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளது.

DIN

வயநாடு: வட கேரளம் மாவட்டமான வயநாட்டில் நிலச்சரிவில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 361 ஆக உயர்ந்துள்ளது. 200-க்கும் மேற்பட்டோரை காணவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளது.

வடக்கு கேரளம் மாவட்டமான வயநாட்டில் கடந்த வாரம் பெய்த தொடா் கனமழை எதிரொலியாக முண்டக்கை, சூரல்மலை, ஆரண்மலை உள்ளிட்ட வயநாட்டின் மலைக்கிராமங்களில் செவ்வாய்க்கிழமை பெரும் நிலச்சரிவுகள் ஏற்பட்டன. நிலச்சரிவின்போது வீடுகளில் தூங்கி கொண்டிருந்த நூற்றுக்கணக்கான பொதுமக்கள் உயிரோடு மண்ணில் புதைந்தனா். சாலியாற்று வெள்ளத்தில் சிலா் அடித்து செல்லப்பட்டனா்.

மண்ணில் புதையுண்டவா்களையும் காட்டாற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டவா்களையும் மீட்பதற்கான மீட்பு-தேடுதல் பணிகள் ஆறாவது நாளாக தொடந்து நடைபெற்று வருகின்றன.

மேலும் பல உடல்கள் கண்டறிவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ள இடங்களில் கூடுதல் படைகள் மீட்புப் படையினா் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் வயநாடு, மலப்புரம் மற்றும் கோழிக்கோடு மாவட்டங்களில் பாயும் சாலியாற்றின் 40 கிலோமீட்டர் நீளத்திற்கு மலப்புரம், நிலம்பூர் அருகே ஏராளமான உடல்கள் மற்றும் உடல் பாகங்கள் மீட்கப்பட்டுள்ளதால், அங்கு தேடுதல் பணிகள் தொடா்ந்து நடைபெற்று வருவதாக மாநில சுற்றுலாத்துறை அமைச்சர் பி.ஏ. முகமது ரியாஸ் ஞாயிற்றுக்கிழமை கூறினார்.

உயிர் பிழைத்தவர்களின் மறுவாழ்வு குறித்து, குறிப்பாக நிவாரண முகாம்களில் வசிப்பவர்கள் மற்றும் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களின் கருத்துக்கள் குறித்து அனைவருடனும் கருத்துக் கேட்பு நடத்தப்பட வேண்டும் என்றார் ரியாஸ்.

முகாம்கள் மற்றும் மருத்துவமனைகளில் உள்ளவர்களின் கருத்துகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்றார்.

ஆனால் இப்போது கருத்துக் கேட்பு நடத்தப்படாது, பாதிக்கப்பட்டவா்கள் அதைப் பற்றி பேசும் மனநிலைக்கு திரும்பியவுடன் அது நடைபெறும் என்று அவர் மேலும் கூறினார்.

நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளில் குழந்தைகளின் கல்விக்கு எந்த வகையிலும் இடையூறு ஏற்படாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் ரியாஸ்.

கடந்த சனிக்கிழமை இரவு வரை, 219 உடல்கள் மற்றும் 143-க்கும் மேற்பட்ட உடல் பாகங்கள் மீட்கப்பட்டுள்ளன. மேலும் முண்டக்கை, சூரல்மலை 206 போ் இன்னும் காணவில்லை மற்றும் இறப்பு எண்ணிக்கை 240 ஆக உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், நிலச்சரிவில் சிக்கி இறந்தவர்களின் எண்ணிக்கை 361 ஆக உயர்ந்துள்ளது. 200-க்கும் மேற்பட்டோரை காணவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளது.

மீட்பு நடவடிக்கையில் அதிநவீன ரேடார்கள், ட்ரோன்கள், கனரக இயந்திரங்கள் ஆகியவை மீட்புக் குழுவினரால் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

சனிக்கிழமை உள்ளூர்வாசிகளுடன் சேர்ந்து கடற்படை, காவல்துறை, தீயணைப்பு மற்றும் மீட்புக் குழுக்கள் மற்றும் தேசிய பேரிடர் மீட்புப் படையினர் நடத்திய மீட்பு நடவடிக்கையில் சாலியாற்றில் இருந்து மேலும் மூன்று உடல்கள் மற்றும் 13 உடல் பாகங்கள் மீட்கப்பட்டன.

இந்த மீட்புப் பணிகளில் சாலியார் ஆற்றில் கண்டெடுக்கப்பட்ட மொத்த உடல்களின் எண்ணிக்கையை 73 ஆகவும், உடல் உறுப்புகளின் எண்ணிக்கை 132 ஆகவும், மொத்தமாக 205 ஆகவும் உள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

மீட்கப்பட்ட உடல்களில் 37 ஆண்கள், 29 பெண்கள், 3 சிறுவர்கள் மற்றும் 4 சிறுமிகள் உள்ளனர் என்று மலப்புரம் மாவட்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

சாலியாற்றின் அமைதியான நீரோட்டம் மரணமாக மாறியது

வயநாட்டின் பேரிடர் பகுதிகளில் தேசிய பேரிடர் மீட்புப் படையினர், கே-9 மோப்ப நாய் படை, ராணுவம், சிறப்பு அதிரடிக் குழு, சென்னை பொறியியல் குழு, காவல்துறை, தீயணைப்புப் படை, வனத்துறை, கடற்படை, கடலோரக் காவல்படை உள்ளிட்ட பல்வேறு படைகளைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான பணியாளர்கள் மீட்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

தேடுதல் மற்றும் மீட்புத் துறையில் நிபுணத்துவம் பெற்ற தனியார் நிறுவனங்கள் மற்றும் தன்னார்வலர்களும் இணைந்து துணிச்சலாக முண்டக்கை மற்றும் சூரல்மலை குடியிருப்புப் பகுதிகளில் நிலச்சரிவில் பாறைகள் மற்றும் மரக் கட்டைகளுக்கு அடியில் சிக்கி உயிருக்காக போராடுபவர்களைத் தேடி வருகின்றனர்.

முண்டக்கைப் பகுதியில் தெர்மல் ஸ்கேன் மூலமாக ராணுவப் படை பரிசோதநை செய்ததில் தற்போது எந்த உடலும் இல்லை என்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

முண்டக்கைப் பகுதியில் 540 வீடுகள் இருந்த நிலையில் தற்போது 40-க்கும் குறைவான வீடுகளே உள்ளன.

இதேபோன்று சூரல்மலையில் 600 வீடுகளும், அட்டமலையில் 68 வீடுகளும் முற்றிலும் சிதைந்துள்ளன. இதனால் அந்தப் பகுதிகளில் இனியும் மக்கள் வாழ முடியுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

இந்த நிலையில், நிலச்சரிவை அடுத்து மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் காவல்துறை மற்றும் தீயணைப்புப் படையினரின் முயற்சிகளை முதல்வர் பினராயி விஜயன் ஞாயிற்றுக்கிழமை பாராட்டினார்.

"இந்த சோகத்தை எதிர்கொண்டு, காவல்துறை மற்றும் தீயணைப்புப் படையினர் அனைவரும் தீவிர மன உறுதியுடன் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். அங்கிருந்து மக்களை மீட்கும் துணிச்சலான முயற்சிகளில் நமது காவல்துறை முன்மாதிரியான துணிச்சலை நாங்கள் பார்த்தோம்" என்று விஜயன் கூறினார்.

"பேரழிவு" சம்பவத்தில் இருந்து மாநிலம் இன்னும் மீளவில்லை. வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவு கேரளத்தின் வரலாற்றில் மிகப்பெரிய பேரழிவாகும். தேசிய அளவிலான குறிப்பிடத்தக்க பேரிடர்களில் இதுவும் ஒன்றாகும். சூரல்மலை மற்றும் முண்டக்கை மக்கள் நிலச்சரிவின் இழப்பில் இருந்து இன்னும் முழுமையாக மீளவில்லை. ஒரு ஒட்டுமொத்த கிராமமுமே நிலச்சரிவில் அழிந்தது கேரளம் மாநில மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது என்று முதல்வர் விஜயன் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மருதம் எல்லையம்மன் கோயில் தோ்த் திருவிழா

முனைவா் வசந்திதேவி மறைவுக்கு அஞ்சலி

தஞ்சையில் ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்டம் தொடக்கம்

வாலாஜாபாத்தில் 195 ஆண்டுகள் பழைமையான கல்வெட்டு கண்டுபிடிப்பு

ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சுற்றுலா பேருந்து விபத்து: 6 போ் காயம்

SCROLL FOR NEXT