ஆப்பிரிக்காவில் அதிகரித்துவரும் குரங்கு அம்மை நோய் பாதிப்பால், உலகளாவிய சுகாதார அவசர நிலையை உலக சுகாதார அமைப்பு புதன்கிழமை அறிவித்தது. இந்த வைரஸ் சர்வதேச எல்லைகள் மூலம் பல நாடுகளில் பரவக்கூடும் என்றும் எச்சரிக்கை விடுத்தது.
ஐநா சபையின் உலக சுகாதார அமைப்பின் அவசரக்குழுக் கூட்டத்திற்குப் பிறகு உலக சுகாதார அமைப்பின் இயக்குநர் டெட்ரோஸ் அதானோம் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.
ஆப்பிரிக்கா நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள் குரங்கு அம்மை நோய் பாதிப்பைப் பொது சுகாதார அவசர நிலையாக செவ்வாய்க்கிழமையன்று அறிவித்தது.
ஆப்பிரிக்காவில் இந்த ஆண்டு குரங்கு அம்மை நோயால் 14,000 பேர் பாதிக்கப்பட்டதாகவும், 524 பேர் பலியானதாகவும், இந்த பாதிப்பு கடந்த வருடம் வெளியான புள்ளி விவரத்தைவிட, அதிகம் என்றும் உலக சுகாதார அமைப்பு கூறியுள்ளது.
இதுவரை காங்கோவில் 96%-க்கும் அதிகமாக நோய் பாதிப்புகளும், இறப்புகளும் ஒரே நாட்டில் பதிவாகியுள்ளது. இந்த புதிய வகை நோய் பாதிப்பு மக்கள் மத்தியில் விரைவாகப் பரவி வருவதால் விஞ்ஞானிகள் கவலையடைந்துள்ளனர்.
குரங்கு அம்மை:
குரங்கு அம்மை நோய் ஒரு அரிய வகை நோயாகும். இந்த நோய் ஆப்பிரிக்காவின் சில பகுதிகளில் விலங்குகளிடம் இருந்து மனிதர்களுக்கு பரவியது. இந்த நோய் கடந்த 1958 ஆம் ஆண்டு முதன் முதலில் ஆய்வகத்தில் உள்ள குரங்குகளிடமிருந்து கண்டுபிடிக்கப்பட்டது. அதன் காரணத்தினாலேயே இந்த நோய் குரங்கு அம்மை என அழைக்கப்படுகிறது.
பரவும் விதம்:
இந்த குரங்கு அம்மை, தொற்றினால் பாதிக்கப்பட்ட விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்குப் பரவுகிறது. தொற்றினால் பாதிக்கப்பட்ட விலங்களை தொடுவதன் மூலமாகவும், அதன் உடல் திரவங்கள் மூலமாகவும் இந்த நோய் பெரிதும் மனிதர்களுக்குப் பரவுகிறது.
குரங்கு அம்மையின் அறிகுறிகள்:
குரங்கு அம்மையால் ஒருவர் பாதிக்கப்பட்டால் அவருக்கு 5-லிருந்து 21 நாள்களுக்குள்ளாக நோயின் முதல் அறிகுறி தென்படும். காய்ச்சல், தலைவலி, உடல்வலி, முதுகுவலி, உடல் நடுக்கம் மற்றும் சோர்வடைதல் போன்றன அறிகுறிகளாக தோன்றும். இந்த அறிகுறிகள் தோன்றிய 5 நாள்களுக்குள் உடலில் ஒவ்வாமை ஏற்பட்டு சிகப்பு நிற புள்ளிகள் தோன்றும். பின்பு அவை கொப்புளங்களாக மாறும். அடுத்த 2-4 வாரங்களில் இந்த கொப்புளங்கள் மறைந்து உதிர்ந்து விடும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.