கோவை: கொல்கத்தாவில் முதுநிலை பயிற்சி பெண் மருத்துவர் கொடூர கொலைக்கு கண்டனம் தெரிவித்து கோவை அரசு மருத்துவமனை மருத்துவர்கள் ஒரு மணி நேர வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மேற்கு வங்கம் மாநிலம், கொல்கத்தா ஆரி.ஜி.கர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கடந்த 8-ஆம் தேதி பணியில் இருந்த முதுநிலை பெண் பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொடூரமாக கொலை செய்யப்பட்டார்.
இதுதொடர்பாக சஞ்சய் ராய் என்பவரை காவல்துறை கைது செய்தது. இந்த சம்பவத்தில் பலருக்கு தொடர்பு இருக்கலாம் என சந்தேகிக்கப்படும் நிலையில், கொல்கத்தா உயர்நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து இந்த வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது.
இதனிடையே, பெண் மருத்துவர் படுகொலைக்கு கண்டனம் தெரிவித்து நாடு முழுவதும் போராட்டங்கள் நடந்து வருகின்றன.
இந்த நிலையில், பெண் மருத்துவர் கொலைக்கு நீதி கேட்டும், மருத்துவர்களுக்கு பாதுகாப்பான பணி சூழலை ஏற்படுத்த வலியுறுத்தியும் நாடு முழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் சனிக்கிழமை 24 மணிநேர வேலை நிறுத்தத்தில் ஈடுபட இந்திய மருத்துவ சங்கம் (ஐஎம்ஏ) அழைப்பு விடுத்திருந்தது.
அதனடிப்படையில் கோவை அரசு மருத்துவமனையில் புறநோயாளிகள் பிரிவில் மருத்துவர்கள் பணிக்கு வரவில்லை.கோவை அரசு தலைமை மருத்துவமனைக்கு நாள்தோறும் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் புற நோயாளிகளாக சிகிச்சைக்காக வருவது வழக்கம்.
இந்த நிலையில், மருத்துவர்கள் பணி புறக்கணிப்பினால், நோயாளிகள் சிகிச்சை பெறுவதில் தோய்வு ஏற்பட்டுள்ளது. மருத்துவமனை உள்நோயாளிகளுக்கு, அவசர சிகிச்சைக்கு வருவோருக்கு மருத்துவர்கள் வழக்கமான முறையில் சிகிச்சை அளித்து வருகின்றனர்.நாள்தோறும் வரும் புறநோயாளி பிரிவில் மருத்துவர்கள் இல்லாததால் நோயாளிகள் காத்துக் கிடக்கின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.