கோவையில் சேற்றில் சிக்கி உயிருக்குப் போராடிய காட்டு யானை 3 மணி நேர போராட்டத்திற்குப் பிறகு மீட்கப்பட்டது.
கோவை மாவட்டம், வனப்பகுதியில் ஏராளமான யானைகள் உள்ளன. இந்த யானைகள் அடிக்கடி விவசாயிகள் தோட்டம் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் புகுந்து சேதத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்த நிலையில் பேரூர் அருகே உள்ள கரடிமடை, குப்பனூர், தீத்திபாளையம் ஆகிய பகுதிகளில் கடந்த 10 நாட்களாக வயதான பெண் யானை அங்கு உள்ள விவசாய தோட்டத்துக்குள் புகுந்து சுற்றித் திரிந்தது வந்தது. அந்தப் பகுதியில் விவசாய பயிர்களையும், விவசாய பொருட்களையும் தொடர்ந்து சேதப்படுத்தி வந்தது.
இதனால் அந்த பெண் யானை வருவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கூறி வந்தனர். வனத்துறையினர் அந்த பெண் யானையை தேடி வந்தனர். இந்த நிலையில் நேற்று மாலை 6 மணிக்கு அந்தப் பெண் யானை மீண்டும் மலையை விட்டு இறங்கி குடியிருப்பு பகுதிகளிலும் விவசாய தோட்ட பகுதியிலும் சுற்றி பயிர்களைச் சேதப்படுத்தியது. அதோடு அந்த வழியாக காட்டுப் பகுதிகளில் வாகனங்களில் செல்வோரையும் துரத்தியது.
பெண் யானையின் தொல்லையால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பீதிஅடைந்து காணப்பட்டு வந்தனர். இந்நிலையில் தோட்டத்து பகுதிக்குள் சுற்றித் திரிந்த பெண் யானை குப்பனூர் பகுதியில் உள்ள தோட்ட குப்பைச் சேற்றுக் குழியில் விழுந்து சிக்கிவிட்டது. சேற்றுக்குள் சிக்கிய அந்த பெண் யானையால் அதில் இருந்து மீண்டு வர முடியவில்லை. இதனால் யானை பயங்கரமாக பிழியறியது. யானையின் சத்தம் கேட்டு அங்கு விவசாயிகள் திரண்டுனர்.
அப்போதுதான் யானை சேற்றுக்குள் இருந்து வெளியில் வர முடியாமல் தவித்து கொண்டு இருப்பது தெரிய வந்தது. உடனடியாக விவசாயிகள் இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். வனத்துறை அலுவலர் அருண் மற்றும் வன காவலர்கள் அங்கு விரைந்து வந்தனர். சேற்றுக்குள் சிக்கித் தவித்த யானையை ஜே.சி.பி எந்திரம் மூலம் ராட்சத கயிறு கட்டி சுமார் 3 மணி நேர போராட்டத்திற்குப் பிறகு காலை 10 மணிக்கு சேற்றில் இருந்து வெளியே கொண்டு வந்தனர்.
சுமார் 3 மணி நேரத்திற்கு மேலாக யானை சேற்றுக்கு உள்ளேயே சிக்கிக் கிடந்ததால் சோர்வாக காணப்பட்டது. எனவே யானையை மீட்ட வனத் துறையினர், கால்நடைத்துறை மருத்துவர் வெண்ணிலா தலைமையிலான குழு மூலம் அதற்கு முதலுதவி சிகிச்சை அளித்து வருகின்றனர். அதன் பிறகு யானை பழைய நிலைமையை அடைந்ததும், மீண்டும் வனப்பகுதிக்குள் கொண்டு விட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.