சென்னை, எழிலகத்தில் 5.12 கோடி ரூபாய் செலவில் தரம் உயர்த்தப்பட்டுள்ள மாநில அவசரகால செயல்பாட்டு மையத்தை முதல்வர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார்.
முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று (22-08-2024) வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில் சென்னை, எழிலகத்தில் 5.12 கோடி ரூபாய் செலவில் 10,000 சதுர அடி பரப்பில் 24 மணி நேரமும் செயல்படும் பல்வகை பேரிடர்களுக்கான முன்னெச்சரிக்கை மையமாக தரம் உயர்த்தப்பட்டுள்ள மாநில அவசரகால செயல்பாட்டு மையத்தினை திறந்து வைத்தார்.
விவசாய பெருமக்கள், மீனவர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினருக்கும் பெருமழை, வெள்ளம் போன்ற பேரிடர்கள் குறித்த முன்னெச்சரிக்கை தகவல்களை உடனுக்குடன் சென்றடைவதை உறுதி செய்வது, முன்கூட்டியே வானிலை எச்சரிக்கைகளை வழங்கிட வானிலை கண்காணிப்பு அமைப்புகளை வலுப்படுத்துவது, வெள்ளத் தணிப்பு திட்டங்களை செயல்படுத்துவது போன்ற பேரிடர் தொடர்பான பணிகளை மேற்கொள்ள அரசு தனி கவனம் செலுத்தி வருகிறது.
அந்த வகையில், பொது மக்களுக்கு பேரிடர் முன்னெச்சரிக்கை வழங்கும் உட்கட்டமைப்புகளை மேம்படுத்த 1400 தானியங்கி மழைமானிகள் மற்றும் 100 தானியங்கி வானிலை நிலையங்கள், ராமநாதபுரம் மற்றும் ஏற்காடு பகுதியில் 2 ரேடார்கள் அமைக்கும் பணிகளை தமிழ்நாடு அரசு மேற்கொண்டு வருவதோடு, பல்வகை பேரிடர் முடிவு ஆதார அமைப்புகளையும் (Multi Hazard Decision Support System) ஏற்படுத்தி உள்ளது.
சென்னை, எழிலகத்தில் 24 மணி நேரமும் செயல்பட்டு வரும் மாநில அவசரகால செயல்பாட்டு மையம் மழை, புயல், வெள்ளம், நிலச்சரிவு மற்றும் நிலநடுக்கம் ஆகியவை குறித்தான முன்னெச்சரிக்கை தகவல்களை மாவட்ட நிர்வாகத்திற்கும், இதர துறைகளுக்கும், பொதுமக்களுக்கும், ஊடகங்களுக்கும் தெரிவித்து வருகிறது.
பேரிடர் மேலாண்மையின் புயல் மற்றும் பருவமழைக் காலங்களில் முதல்வர் ஸ்டாலின் மாநில அவசரகால செயல்பாட்டு மையத்திற்கு நேரில் வருகை தந்து, உயர் அலுவலர்கள் மற்றும் மாவட்ட ஆட்சியர்களுடன் கலந்தாலோசனை செய்து, மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து உத்தரவிட்டு வருகிறார்.
24 மணி நேரமும் செயல்படும் இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த மாநில அவசரகால செயல்பாட்டு மையம் 10,000 சதுர அடி பரப்பில் 5.12 கோடி ரூபாய் செலவில் தரம் உயர்த்தப்பட்டு முதல்வரால் இன்றைய நாள் திறந்து வைக்கப்பட்டது. இந்த மையத்தை பார்வையிட்ட முதல்வர் ஸ்டாலினுக்கு, இம்மையத்தின் செயல்பாடுகள் குறித்து வருவாய் நிர்வாக ஆணையர் விளக்கினார்.
இந்த தரம் உயர்த்தப்பட்ட மையத்தில், பேரிடர் காலத்தில், முதல்வர் மாவட்ட ஆட்சியர்களை தொடர்பு கொண்டு அறிவுரை வழங்கும் வகையில் காணொலி வசதியுடன் கூடிய கட்டுப்பாட்டு அறை (Control Room), பேரிடர் காலங்களில், அமைச்சர்கள் மற்றும் உயர் அலுவலர்கள் பேரிடர் ஆயத்த நிலை, மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்கொள்வது குறித்து கலந்தாய்வு கூட்டம் நடத்திடும் வகையில் 70 இருக்கைகள் கொண்ட கூட்ட அரங்கம் (Conference Hall), பொதுமக்கள் தங்கள் புகார்களை பதிவு செய்யும் வகையில் 1070 மற்றும் 112 என்ற கட்டணமில்லா தொலைபேசியுடன் 24 மணி நேரமும் இயங்கக்கூடிய அவசரகால அழைப்பு மையம் (Call Centre), பல்வேறு துறைகளுக்கும் பொதுமக்களுக்கும் உடனுக்குடன் எச்சரிக்கை செய்திகள் வழங்கும் வகையிலான பேரிடர் தொழில்நுட்பப் பிரிவு (Multi Hazard Early Warning Technical Cell), மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை துரிதப்படுத்த 48 துறைகளைச் சார்ந்த அலுவலர்கள் செயல்படும் வகையில் பல்துறை ஒருங்கிணைப்பு மையம் (Inter Departmental Co-ordination Centre), கட்டுப்பாட்டு மையத்தில் பணிபுரியும் பணியாளர்களுக்கு உணவு அருந்தும் அறை மற்றும் ஓய்வு அறை போன்ற பல்வேறு வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
மேலும், தடையற்ற மின்சாரம், தொலைத்தொடர்பு மற்றும் இணையச் சேவை வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளதால், பேரிடர் காலங்களில் தங்குதடையின்றி 24 மணிநேரமும் இந்த மையம் செயல்படும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.