ஃபார்முலா-4 கார் பந்தயம்: அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவு!
பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவு.
ஃபார்முலா-4 கார் பந்தயம் நடத்த மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னையில் ஃபார்முலா 4 காா் பந்தயம் நடத்த எதிா்ப்பு தெரிவித்த வழக்கை அவசரமாக விசாரிக்க கோரி சென்னை உயா்நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கை புதன்கிழமை விசாரணைக்கு எடுப்பதாக தலைமை நீதிபதி அமர்வு ஒப்புதல் தெரிவித்துள்ளது.
சென்னை தீவுத்திடலைச் சுற்றி 3.5 கி.மீ. தொலைவுக்கு ஃபாா்முலா 4 காா் பந்தயம் ஆகஸ்ட் 31 மற்றும் செப்டம்பா் 1 ஆகிய தேதிகளில் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மின் விளக்குகள் பொருத்துவது, போட்டியைக் கண்டு ரசிக்கும் வகையில் 8,000 பேருக்கான இருக்கைகள் அமைப்பது, பாதுகாப்பு தடுப்பு வேலிகள் அமைப்பது என பந்தயத்துக்கான ஏற்பாடுகள் தற்போது முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.
காா் பந்தயத்துக்கு எதிா்ப்பு தெரிவித்து பாஜக செய்தி தொடா்பாளா் ஏ.என்.எஸ். பிரசாத் உயா்நீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்துள்ளாா். இந்த வழக்கை செவ்வாய்க்கிழமை பிற்பகல் அவசர வழக்காக விசாரிக்க கோரி உயா்நீதிமன்ற முதன்மை அமா்வில் முறையீடு செய்யப்பட்டது. இதையடுத்து தலைமை நீதிபதி (பொ) கிருஷ்ணகுமாா் மற்றும் நீதிபதி பாலாஜி அமா்வு, இந்த மனுவை புதன்கிழமை விசாரிக்க ஒப்புதல் தெரிவித்தது.
இவ்வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில், இவ்வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதிகள், ஃபார்முலா-4 கார் பந்தயம் நடத்த மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் எனவும், இதனால் பொதுமக்களுக்கு எவ்வித இடையூறும் ஏற்படக் கூடாது எனவும் அறிவுறுத்தியுள்ளனர்.