இந்தோனேசியா: ஜாவாத் தீவில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கியும் நிலச்சரிவில் புதைந்தும் 3 குழந்தைகள் உள்பட 10 பேர் பலியாகினர். ஆயிரக்கணக்கானோர் இடமாற்றபட்டுள்ள நிலையில், இருவரைக் காணவில்லை எனத் தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த ஒருவார காலமாக இந்தோனேசியாவின் ஜாவாத் தீவில் ஏற்பட்டுவரும் சூறாவளிக்காற்றுடன்கூடிய கனமழையின் காரணமாக அங்குள்ள ஆறுகளில் வெள்ளம் ஏற்பட்டு அணைக்கட்டுகள் உடைந்தன. இதனால், மேற்கு ஜாவா மாகாணத்தின் சுகபூமி மாவட்டத்திலுள்ள 172 கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கின. இதனைத் தொடர்ந்து ஏற்பட்ட நிலச்சரிவினால் நூற்றுக்கணக்கான வீடுகள் மண்ணில் புதைந்ததுடன், பலரது வாழ்வாதாரம் பாதிப்புக்குள்ளானது.
இதனால், அந்தக் கிராமங்களில் வாழ்ந்துவந்த 3,000க்கும் மேற்பட்டோர் வெளியேற்றப்பட்டு தற்காலிக முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
இந்த பெருவெள்ளத்தினால் 31 பாலங்கள் மற்றும் 81 சாலைகள் முழுவதுமாக சேதமடைந்ததுடன்; 1,332 ஏக்கர் பரப்பளவிலான நெல் வயல்களும் 1,170 வீடுகளும் வெள்ளத்தில் மூழ்கடிக்கப்பட்டுள்ளது. மேலும், 3,300 வீடுகள் உள்பட பிற கட்டிடங்களும் சேதமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: சென்னைக்கு அடுத்த சுற்று மழை எப்போது?
இந்தப் பேரிடரில் கடுமையாக பாதிக்கப்பட்ட மூன்று கிராமங்களிலிருந்து வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டும் நிலச்சரிவில் புதைந்தும் உயிரிழந்த 10 பேர்களது உடல்கள் இன்று காலை மீட்புப் படையினரால் மீட்கப்பட்டது. மேலும், காணாமல் போன இரண்டு பேரைத் தேடிவருகின்றனர்.
வெள்ள நீரில் அடித்து வரப்பட்ட வாகனங்களும், சூறாவளிக் காற்றினால் வேரோடு மரங்கள் சாய்ந்தும், மண்சரிந்து விழுந்த பாறைகள் என அனைத்தும் சாலைகளில் சூழ்ந்து அன்றாட வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
கோடிக்கணக்கான மக்கள் வாழும் 17,000 தீவுகளைக் கொண்ட இந்தோனேசியாவில் அக்டோபர் முதல் மார்ச் மாதம் வரையிலான பருவமழைக் காலத்தில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஏற்படும் அபாயம் உள்ளது.
கடந்த மாதம் வடக்கு சுமத்ரா மாகாணத்தில் ஏற்பட்ட கனமழையைத் தொடர்ந்து ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவினால் 20 பேர் பலியானதுடன் இருவரைக் காணவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.