முகப்பு
தற்போதைய செய்திகள்

விடுதலை 2ல் அரசியல் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இருக்கிறது: நடிகர் சூரி பேட்டி

விடுதலை 2 படத்தில் கமர்சியலையும் தாண்டி அரசியல் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இருக்கிறது என நடிகர் சூரி தெரிவித்தார்.

Updated On : 20 டிசம்பர், 2024 at 9:47 AM
திருச்சியில் செய்தியாளர்களுடன் பேசிய நடிகர் சூரி
பகிர்:

நடிகர்கள் விஜய் சேதுபதி, சூரி நடிப்பில் உருவான விடுதலை - 2 திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

திருச்சியில் படப்பிடிப்பில் ஈடுபட்டுள்ள நடிகர் சூரி, திருச்சியில் படம் வெளியாகியுள்ள திரையரங்கிற்கு வந்து படம் பார்த்துவிட்டு விடுதலை 2 படத்தில் கமர்சியலையும் தாண்டி அரசியல் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இருக்கிறது என தெரிவித்தார்.

திருச்சியில் அவர் செய்தியாளர்களுடன் பேசுகையில், விடுதலை - 1 படத்திற்கு மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர், அந்தப் படத்தை கொண்டாடினர். அதேபோன்று விடுதலை - 2 படத்தையும் மக்கள் கொண்டாடுவார்கள் என்கிற நம்பிக்கை இருக்கிறது.

விடுதலை 2 படத்தில் கமர்சியலை தாண்டி மக்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அரசியல் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இருக்கிறது. ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் இந்த திரைப்படம் இருக்கும் என தெரிவித்தார்.

சினிமா ரசிகர்கள் அனைவரும் விடுதலை 2 படத்தை பாருங்கள். இந்த படத்துக்கு மக்களிடம் கிடைக்கும் வரவேற்பை பொறுத்து, விடுதலை 3 எடுப்பது குறித்து யோசிப்போம்.

மேலும், அடுத்தடுத்த படங்களில் கதை நாயகனாகவே பயணிப்பேன். விடுதலை 2 படத்தில் வாத்தியார் யார் என்பது குறித்து விரிவாக இருக்கும். நானும் படத்தில் இருப்பேன்.

விடுதலை 2 படம் அனைவரின் வாழ்வோடு ஒன்றியதாக இருக்கும். படம் பார்த்துவிட்டு வெளியே வருபவர்களுக்கு நிச்சயம் வலி மிகுந்த ஒரு உணர்வைத் தரும் என சூரி தெரிவித்தார்.

மேலும், நல்ல கதை அமைந்தால் சிவகார்த்திகேயன் உடன் மீண்டும் இணைந்து நடிப்பேன். யார் அதில் கதாநாயகன் என்பதை சிவகார்த்திகேயன் தான் முடிவு செய்ய வேண்டும். ஆனால் எனக்கு எப்போதும் கதாநாயகன் என்னுடைய தம்பி சிவகார்த்திகேயன் தான்.

அரசியலுக்கு வருவீர்களா என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு, திரைத்துறையே நன்றாகத் தானே இருக்கிறது, இதிலேயே பயணிப்போம் என்றார்.

அடுத்து " மாமன் "என்கிற படத்தில் நாயகனாக நடித்து வருகிறேன் அந்த படத்தின் படப்பிடிப்பு திருச்சியில் தான் நடந்து வருகிறது என சூரி கூறினார்.

முழு கட்டுரையைப் படிக்க →