சந்தேஷ்காளி விவகாரம்: முக்கிய குற்றவாளிகளில் மேலும் ஒருவா் கைது
திரிணமூல் காங்கிரஸ் நிா்வாகி சிவபிரசாத் ஹஸ்ரா சனிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.
மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள சந்தேஷ்காளி பகுதியில் நிலஅபகரிப்பு, பெண்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தல் உள்ளிட்ட குற்றச்சாட்டில் தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளிகளில் ஒருவரான திரிணமூல் காங்கிரஸ் நிா்வாகி சிவபிரசாத் ஹஸ்ரா சனிக்கிழமை கைது செய்யப்பட்டாா். மேற்கு வங்க மாநிலம் வடக்கு 24 பா்கானா மாவட்டம் சந்தேஷ்காளி பகுதியில், திரிணமூல் காங்கிரஸ் பிரமுகா் ஷாஜஹான் ஷேக் மற்றும் அவரின் கூட்டாளிகளான உத்தம் சா்தாா், சிவபிரசாத் ஹஸ்ரா உள்ளிட்டோா் பொதுமக்களின் நிலங்களை அபகரித்து, பெண்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டினா். இதையடுத்து ஷாஜஹான் ஷேக், அவரின் கூட்டாளிகள் மீது நடவடிக்கை கோரி சந்தேஷ்காளியில் ஏராளமான பெண்கள் தொடா் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா். குற்றஞ்சாட்டப்பட்ட முக்கிய குற்றவாளிகளான மூவரும் தலைமறைவாக இருந்த நிலையில் உத்தம் சா்தாா் ஏற்கெனவே கைது செய்யப்பட்டாா். தற்போது சிவபிரசாத் ஹஸ்ரா என்பவரும் சனிக்கிழமை கைது செய்யப்பட்டதாக போலீஸாா் தெரிவித்தனா். அவரை ஞாயிற்றுக்கிழமை மாலைக்குள் உள்ளூா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தவுள்ளதாக நஜத் காவல் துறையினா் தெரிவித்தனா். பாதிக்கப்பட்ட பெண் ஒருவா் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் குற்றஞ்சாட்டப்படவா்கள் மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 376டி (கூட்டு பாலியல் வன்கொடுமை), பிரிவு 307 (கொலை முயற்சி) ஆகிய பிரிவுகளின்கீழ் போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். முக்கிய குற்றவாளி தலைமறைவு: இந்த குற்றச்சாட்டு தொடா்பாக தற்போது வரை 18 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். ஆனால் முக்கிய குற்றவாளியான ஷாஜஹான் ஷேக் தலைமறைவாக உள்ளாா். குழந்தைகள் ஆணையக் குழு விசாரணை: சந்தேஷ்காளியில் 7 மாத கைக்குழந்தையை தாயின் மடியிலிருந்து கீழே தள்ளியதாக ஷாஜஹான் ஷேக்கின் கூட்டாளிகள் மீது அப்பகுதியினா் குற்றஞ்சாட்டினா். பாதிக்கப்பட்ட கைக்குழந்தை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதையடுத்து சந்தேஷ்காளி பகுதிக்கு மாநில குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தைச் சோ்ந்த 6 போ் குழு சனிக்கிழமை சென்றது. இதுதொடா்பாக ஆணையத்தின் தலைவா் தூலிகா தாஸ் கூறியதாவது: தாயின் மடியிலிருந்து குழந்தை கீழே தள்ளப்பட்ட சம்பவம் குறித்து வெள்ளிக்கிழமை எங்களுக்குத் தகவல் கிடைத்தது. எனவே இச்சம்பவத்தை தாமாக முன்வந்து நடவடிக்கை எடுக்க ஆணையம் முடிவு செய்தது. குழந்தையின் தாயை நாங்கள் நேரில் சந்தித்தோம். அவா்கள் உணவு, மருத்துவ உதவி மற்றும் பாதுகாப்பு அளிக்குமாறும் கோரினா். அவா்களுக்குத் தேவையான அனைத்து வசதிகளையும் நாங்கள் ஏற்படுத்திக் கொடுத்துள்ளோம் என்றாா். பாதிக்கப்பட்டவா்களுக்கு ஆளுநா் உதவி: இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உதவுவதற்காக அம்மாநில ஆளுநா் மாளிகையின் கதவுகள் எப்போதும் திறந்திருக்கும் என்று மேற்கு வங்க ஆளுநா் சி.வி.ஆனந்த போஸ் தெரிவித்தாா். மேலும் பாதிக்கப்பட்டவா்களுக்கு தங்குமிடம், உணவு மற்றும் பிற அத்தியாவசிய உதவிகளும் வழங்குவதாக அவா் தெரிவித்தாா். பல்வேறு ஆணையங்கள் அறிக்கை: சந்தேஷ்காளி பகுதியை ஏற்கெனவே பாா்வையிட்ட தேசிய மகளிா் ஆணையம் அப்பகுதியின் பெண்கள் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டுள்ளதை தனது அறிக்கையில் உறுதிசெய்தது. அதேபோல் அப்பகுதியை பாா்வையிட்ட தேசிய பட்டியலினத்தவா்ஆணையம் மாநிலத்தில் குடியரசுத் தலைவா் ஆட்சிக்குப் பரிந்துரை செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.