புதிய குற்றவியல் சட்டங்களின் ஹிந்திப் பெயர்களை அரசியலமைப்புக்கு எதிரானது என்று உத்தரவிடக் கோரி செவ்வாய்க்கிழமை சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
9 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களில் மட்டுமே ஹிந்தி அலுவல் மொழியாக உள்ளதாக மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்யன் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:
“பாரதிய நியாய சம்ஹிதா, பாரதிய நாகரிக சுரக்க்ஷா, பாரதிய சாக்ஷிய அதினியம் ஆகிய 3 புதிய குற்றவியல் சட்டங்களுக்கு ஹிந்தியில் பெயரிடப்பட்டுள்ளது அலுவல் மொழிச் சட்டம் 1963, தமிழ்நாடு அலுவல் மொழிச் சட்டம் 1956 இன் படி, அரசியலமைப்புக்கு எதிரானது என்று உத்தரவிட வேண்டும்.
ஹிந்தி மற்றும் சமஸ்கிருதம் மொழிகளில் புதிய சட்டங்களுக்கு அரசு பெயரிட்டுள்ளது. நாட்டில் 28 மாநிலங்கள், 8 யூனியன் பிரதேசங்கள் உள்ளன. அவற்றில் 9 மாநிலங்கள், 2 யூனியன் பிரதேசங்களில் மட்டுமே ஹிந்தி அலுவல் மொழியாக உள்ளது. 56.37 இந்தியர்களுக்கு ஹிந்தி தாய் மொழி இல்லை.
ஆகையால், அமைச்சரவை செயலகம், உள்துறை செயலகம் மற்றும் சட்டச் செயலகங்களுக்கு ஆங்கிலத்தில் பெயர் மாற்றம் செய்ய உத்தரவிடவும் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், ஹிந்தி மற்றும் சமஸ்கிருதம் தெரியாத சட்ட மாணவர்கள், சட்ட ஆசிரியர்கள், வழக்கறிஞர்கள், சட்ட அதிகாரிகள், நீதித்துறை அதிகாரிகள் மற்றும் பொதுமக்களின் நலன் கருதி தான் இந்த மனுவை தாக்கல் செய்ததாக ஆதித்யன் தெரிவித்தார்.
இந்த மனு விரைவில் சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு பட்டியலிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய தண்டனைச் சட்டம், இந்திய சாட்சியங்கள் சட்டம் போன்ற குற்றவியல் சட்டங்கள் நீக்கப்பட்டு, பாரதிய நியாய சம்ஹிதா, பாரதிய நாகரிக சுரக்க்ஷா, பாரதிய சாக்ஷிய அதினியம் ஆகிய 3 புதிய குற்றவியல் சட்டங்கள் திங்கள்கிழமை முதல் அமலுக்கு வந்தது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.