கோவை: மன்னார்காடு வனப் பகுதியில் உள்ள சிறுவாணி அணையில் 45 அடி வரை தண்ணீர் தேக்க கேரள அரசு அனுமதி அளித்து உள்ளது. இருந்த போதிலும் அணையின் முழு கொள்ளளவுக்கு தண்ணீர் தேக்க அனுமதிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், மன்னார்காடு வனப் பகுதியில் சிறுவாணி அணை உள்ளது. 50 அடி உயரம் கொண்ட இந்த அணை மூலம் கோவை மாநகரப் பகுதிக்கு குடிநீர் கொண்டு செல்லப்படுகிறது. அணையை கேரள அரசு பராமரித்து வருகிறது. அதற்கான செலவை தமிழக அரசு ஆண்டுதோறும் வழங்கி வருகிறது.
இந்த அணையில் இருந்து நாள்தோறும் 11 கோடி லிட்டர் தண்ணீர் எடுக்க முடியும். ஆனால் கேரளத்தில் சில ஆண்டுகளுக்கு முன் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் சிறுவாணி அணையில் 45 அடிக்கு மேல் தண்ணீர் தேக்கக் கூடாது என்று அந்த மாநில அணை பாதுகாப்பு குழு உத்தரவிட்டது. இதையடுத்து அணையின் நீர்மட்டம் 40 அடியை தாண்டினாலே கேரள அதிகாரிகள் அணையில் இருந்து ஆற்றுக்கு தண்ணீரை திறந்து விட்டனர். இந்த அணை ஒருமுறை முழு கொள்ளளவை எட்டினால் மட்டுமே அந்த ஆண்டு முழுவதும் கோவைக்கு தட்டுப்பாடு இல்லாமல் குடிநீர் வழங்கலாம். ஆனால் முழு கொள்ளளவை எட்டுவதற்கு கேரள அரசு அதிகாரிகள் அனுமதிக்கப்படாதாதல் ஏப்ரல், மே மாதங்களில் இந்த அணையில் இருந்து எடுக்கும் குடிநீரின் அளவு குறைவாகவே இருந்து வருகிறது.
கடந்த சில மாதங்களாக அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியில் போதிய அளவு மழை பெய்யாததால் அணையில் நீர்மட்டம் வேகமாக குறைந்தது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு அணையின் நீர்மட்டம் 8 அடிக்கு குறைவாக சென்றது. இதனால் அணையில் இருந்து எடுக்கப்படும் தண்ணீரின் அளவு 3 கோடி லிட்டராக குறைக்கப்பட்டது. இதன் காரணமாக அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியில் மழையை எதிர்பார்த்து காத்து இருந்தனர்.
இந்த நிலையில்,கேரளத்தில் தென்மேற்கு பருவமழை இந்த ஆண்டில் முன் கூட்டியே தொடங்கியது. இதனால் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியில் பரவலாக மழை பெய்தது. எனவே அணைக்கு வரும் தண்ணீரின் அளவு அதிகரித்தது. இதனால் அணையின் நீர்மட்டம் உயரத் தொடங்கியது. அணையின் நீர்மட்டம் 42 அடியை தாண்டியதும் அதிகாரிகள் எவ்வித முன் அறிவிப்பும் இல்லாமல் அணையில் இருந்து ஆற்றுக்கு தண்ணீர் திறந்து விட்டனர். இரண்டு நாட்களாக அணையில் இருந்து வினாடிக்கு ஆயிரம் கன அடி விதம் தண்ணீர் திறக்கப்பட்டது. இதன் காரணமாக அணையின் நீர்மட்டம் 42 அடியை தாண்டவில்லை.
இது குறித்து தகவல் அறிந்து மாநகராட்சி ஆணையாளர் சிவ குரு பிரபாகரன் மற்றும் அதிகாரிகள் அணைக்கு சென்று நேரில் பார்வையிட்டு அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீரின் அளவை குறைக்குமாறு அறிவுறுத்தினார்கள். இதனால் அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீரின் அளவு குறைக்கப்பட்டது. அத்துடன் அணையின் நீர்மட்டம் 45 அடியை தாண்டினால் மட்டும் தண்ணீர் திறக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது.
இந்த நிலையில், சிறுவாணி அணையில் 45 அடி வரை தண்ணீர் தேக்க கேரள அரசு அனுமதி அளித்து உள்ளது. இருந்த போதிலும் அணையின் முழு கொள்ளளவுக்கு தண்ணீர் தேக்க அனுமதிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.