மாநில அரசின் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிப்பதற்கு தாமதம் செய்வதாகக் கூறி தொடரப்பட்ட வழக்கில் கேரளம், மேற்கு வங்க ஆளுநர்களுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
கேரள மற்றும் மேற்கு வங்க ஆளுநர்கள் மாநில அரசின் மசோதாக்களை ஒப்புதல் அளிப்பதற்கு கால தாமதம் செய்வதாகக் கூறி தாக்கல் செய்த மனுக்கள் மீது உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை நடைபெற்றது.
தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் மற்றும் நீதிபதிகள் ஜே.பி. பார்திவாலா மற்றும் மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு, இந்த விவகாரத்தில் அந்தந்த ஆளுநர் அலுவலகங்கள் மற்றும் மத்திய அரசு பதிலளிக்குமாறு உச்ச நீதிமன்றம் கேட்டுக் கொண்டுள்ளது.
மாநிலங்களில் இருந்து கூட்டறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்றும், 3 வாரங்களில் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
மேற்கு வங்க சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் சி.வி. ஆனந்த போஸ் ஒப்புதல் அளிப்பதற்கு கால தாமதம் ஏற்பட்டதாகக் குற்றம் சாட்டி மேற்கு வங்க அரசு புதிய மனு ஒன்றை தாக்கல் செய்து இருந்தது.
முன்னதாக, ஆளுநர் போஸுக்கு எதிராக இதேபோன்ற குற்றச்சாட்டுகளுடன் சயான் முகர்ஜி என்பவர் ஒரு பொது நல வழக்கு தாக்கல் செய்தார், இந்த விவகாரத்தில் நீதிமன்றம் ஏப்ரல் மாதம் நோட்டீஸ் அனுப்பி இருந்தது.
இதனிடையே, கேரள ஆளுநர் ஆர்ஃப் முகமது கானுக்கு எதிராக கேரள அரசு இதேபோன்ற மனுவை தாக்கல் செய்தது.
கேரள அரசின் சார்பாக இன்று ஆஜரான மூத்த வழக்குரைஞர் கேகே வேணுகோபால், கேரள ஆளுநர் அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிராக நடந்து கொள்வதாக வலிவுறுத்தினார்.
இந்த விவகாரத்தில் ஆளுநரின் கூடுதல் தலைமைச் செயலாளர் மற்றும் மத்திய அரசு உரிய பதில் அளிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இந்த விசாரணையின்போது மேற்கு வங்கத்திலும் ஆளுநர் போஸுக்கு எதிராக இதேபோன்ற பிரச்னை இருப்பதாக மூத்த வழக்குரைஞர் ஏஎம் சிங்வி சுட்டிக் காட்டினார்.
”ஒவ்வொரு முறையும் நீதிமன்றம் விசாரிக்கும்போது மசோதாக்கள் நிறைவேற்றப்படுகின்றன. தமிழக வழக்கிலும் இதேதான் நடந்தது” என்று அவர் தெரிவித்தார்.
”மேற்கு வங்க வழக்கிலும் நோட்டீஸ் வழங்க வேண்டும். கேரள ஆளுநர் அலுவலகத்துக்கும், மத்திய உள்துறை அமைச்சகத்துக்கும் நோட்டீஸ் அனுப்புவோம்” என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.