உச்ச நீதிமன்றம் 
தற்போதைய செய்திகள்

கன்வார் யாத்திரை: கடை உரிமையாளர்களின் பெயர் எழுத இடைக்கால தடை நீட்டிப்பு!

ஆகஸ்ட் 5 ஆம் தேதி வரை இடைக்கால தடை நீட்டிப்பு.

DIN

கன்வார் யாத்திரையின்போது, யாத்திரை நடக்கும் பகுதிகளில் உள்ள கடை உரிமையாளர்களின் பெயர்களை எழுத உத்தரப்பிரதேச அரசு பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால தடையை ஆகஸ்ட் 5 ஆம் தேதி வரை நீட்டித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உத்தர பிரதேசத்தில் சிவபக்தா்கள் ‘காவடி யாத்திரை’ (கான்வா் யாத்திரை) செல்லும் பாதைகளில் உள்ள உணவகங்களின் பெயா் பலகைகளில் உரிமையாளா்களின் பெயா் கட்டாயம் இடம்பெற வேண்டுமென்ற சா்ச்சைக்குரிய உத்தரவை மாநிலம் முழுவதும் நடைமுறைப்படுத்த பாஜக அரசு முடிவு செய்துள்ளது.

கங்கையையொட்டிய புண்ணியத் தலங்களுக்கு நடைப்பயணமாக சென்று, அங்கு கலசங்களில் நீரை சேகரித்து, தங்களது ஊரில் உள்ள சிவனுக்கு அபிஷேகம் செய்வதற்கான காவடி யாத்திரை, வடமாநிலங்களில் ஆண்டுதோறும் நடைபெறுவது வழக்கம்,

வழக்கம் போல, இந்த ஆண்டு கன்வார் யாத்திரை இன்று தொடங்குவதை முன்னிட்டு, உத்தர பிரதேச மாநிலம், முஸாஃபா்நகா் மாவட்டத்தில் காவல்துறை அண்மையில் ஒரு உத்தரவை பிறப்பித்தது. அதன்படி, பக்தா்கள் யாத்திரை செல்லும் வழிப்பாதைகளில் உள்ள அனைத்து உணவகங்களின் பெயா் பலகைகளில் உரிமையாளா், அவரது கைப்பேசி எண், முகவரி ஆகியவை கட்டாயம் இடம்பெற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது.

காவல்துறையின் இந்த உத்தரவானது கடை வைத்திருக்கும் முஸ்லிம் வணிகர்களை குறிவைத்து பிறப்பிக்கப்பட்டதாக பெரும் சா்ச்சை எழுந்தது. அதேநேரம், குழப்பங்களை தவிா்ப்பதோடு, நல்லிணக்கத்தை பராமரிக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது எனவும் காவல்துறை விளக்கம் கொடுத்திருந்தது. ஆனால், இதனை மாநிலம் முழுவதும் நடைமுறைப்படுத்த உத்தரப்பிரதேச அரசு முடிவு செய்திருப்பதாகவும் கூறப்பட்டது.

உத்தரகண்டின் ஹரித்வாரிலும், ஏராளமான பக்தா்கள் காவடி யாத்திரை மேற்கொள்வா் என்பதால், அந்த மாநிலத்திலும் இதேபோன்ற உத்தரவு அமல்படுத்தப்பட்டது.

இது தொடர்பாக முஸ்லிம் வணிகர்கள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், வரும் வெள்ளிக்கிழமைக்குள் இந்த முடிவு குறித்து இரு மாநில அரசுகளும் பதில் அளிக்கவும், கன்வார் யாத்திரையின்போது, அப்பகுதியில் உள்ள கடைகளில், உரிமையாளர்களின் பெயர் எழுதி வைக்க உத்தரப் பிரதேச அரசு பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்தும் உத்தரவிட்டது.

இந்த நிலையில், இவ்வழக்கு ரிஷிகேஷ் ராய் மற்றும் எஸ்விஎன் பாட்டி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள், “ஜூலை 22 ஆம் தேதி மீதான உத்தரவில் எவ்வித விளக்கமும் வழங்கப் போவதில்லை, தெரிவிக்க வேண்டியதை நாங்கள் அன்றே தெரிவித்துவிட்டோம். பெயரை எழுத வேண்டும் என்று யாரையும் வற்புறுத்த முடியாது” என்று தெரிவித்தனர்.

மேலும், மத்தியப் பிரதேசம் மற்றும் உத்தரகண்ட் மாநிலங்களின் உத்தரவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்களுக்கு பதிலளிக்க வேண்டும் என்றும், மனுதாரர்கள் தங்களுடைய பதிலை தெரிவிக்கலாம் என்றும் தெரிவித்து வழக்கை ஆக. 5 ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விசிலடித்த ரசிகரைக் கண்டித்த அஜித்!

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு எதிராகப் போராடுவோம்! தடை செய்ய வலியுறுத்தல்

மணிப்பூரில் சட்டம் ஒழுங்கு மேம்பட்டுள்ளது: பிரேன் சிங்

ஓஜி ஓடிடி தேதி!

முதல்முறையாக ஃபிஃபா உலகக் கோப்பைக்குத் தேர்வான ஆப்பிரிக்க நாடு..! 5 லட்சம் மக்கள் தொகை!

SCROLL FOR NEXT