டி20 உலகக்கோப்பைத் தொடர் முடிந்த பின் இந்தியக் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் பதவியிலிருந்து விலக இருப்பதாகத் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார்.
3 ஆண்டுகளுக்கும் மேலாக இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக இருக்கும் ராகுல் டிராவிட்டின் பதவிக்காலம் ஜூன் மாதத்துடன் முடிவடைகிறது.
இதைத் தொடர்ந்து இந்தியக் கிரிக்கெட் வாரியம் அடுத்த பயிற்சியாளரைத் தேர்ந்தெடுப்பதற்கு அறிவிப்பு வெளியிட்டிருந்தது. அதற்கான விண்ணப்பங்களை சமர்ப்பிக்கக் கடந்த மாதம் கடைசி வாரம் வரை கால அவகாசம் கொடுத்திருந்தனர்.
இது தொடர்பாகப் பேசிய ராகுல் டிராவிட், “இந்திய அணிக்கான பயிற்சியாளர் பதவியில் நான் மிகவும் விரும்பி பணியாற்றினேன். எனக்கு மிகவும் பிடித்தமான இந்த வேலையில் சிறப்பான வீரர்களுடன் பணியாற்றியுள்ளேன்.
எனக்குக் கிடைத்த இந்த வாய்ப்பில் மிகவும் அர்ப்பணிப்புடன் பணியாற்றி வந்தேன். இந்த டி 20 உலகக்கோப்பைத் தொடருடன் இந்தப் பணியிலிருந்து விடைபெறுகிறேன். இதற்குப் பிறகு மீண்டும் இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்கும் எண்ணம் இல்லை” என்று கூறினார்.
நடப்பாண்டு ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா அணி வென்றதைத் தொடர்ந்து அந்த அணியின் பயிற்சியாளரான இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் கௌதம் கம்பீர் அடுத்தத் தலைமைப் பயிற்சியாளராகத் தேர்ந்தெடுக்கப்படலாம் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும், வி.வி.எஸ் லட்சுமணன், ஆஷிஷ் நெஹ்ரா போன்றோரின் பெயர்களும் பயிற்சியாளர் தேர்வில் உள்ளன. இந்திய கிரிக்கெட் வாரியம் யாரைப் பயிற்சியாளராகத் தேர்ந்தெடுக்கப்படவுள்ளது என்பது ரசிகர்களிடையே ஆர்வத்தைத் தூண்டியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.