புது தில்லி: சென்னையில் இருந்து மும்பை நோக்கிச் சென்ற இண்டிகோ விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததை அடுத்து செவ்வாய்க்கிழமை இரவு 10:30 மணியளவில் மும்பை விமான நிலையத்தில் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
பயணிகள் அனைவரும் பத்திரமாக விமானத்தில் இருந்து இறக்கிவிடப்பட்டதாக இண்டிகோ நிறுவனம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
"சென்னையில் இருந்து மும்பைக்கு இயக்கப்படும் இண்டிகோ விமானம் 6E 5149-க்கு செவ்வாய்க்கிழமை மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விமானம் மும்பையில் தரையிறக்கப்பட்டது. விமானக் குழுவினர் நெறிமுறைகளை பின்பற்றி விமானத்தை தனிமைப்படுத்தப்பட்ட வழித்தடத்திற்கு கொண்டு சென்றனர். பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக விமானத்தில் இருந்து இறக்கப்பட்டனர்.
பின்னர், விமானம் முழுவதும் மத்திய தொழிலக பாதுகாப்புப் படையினா், வெடிகுண்டு கண்டறியும் மோப்ப நாய்ப் பிரிவு, வெடிகுண்டு கண்டறிதல் மற்றும் செயலிழக்கும் படையினா் ஆகியோர் தீவிர பாதுகாப்பு சோதனைகள் மேற்கொண்டர்.
இதில், சந்தேகத்திற்கிடமான பொருள்கள் எதுவும் கிடைக்காததை அடுத்து விமானத்துக்கு வந்த வெடிகுண்டு மிரட்டல் புரளி என அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதனால் மும்பை விமான நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்ம நபர் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருவதாக போலீசார் தெரிவித்தனர்.
இதேபோல, மும்பை விமான நிலைய அதிகாரிகளுக்கு செவ்வாய்க்கிழமை மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்ததை அடுத்து குஜராத்தின் வதோதரா மற்றும் பிகாரின் பாட்னா விமான நிலையங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது.
மும்பை பெருநகர மாநகராட்சி (பிஎம்சி) தலைமையகத்திற்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
மின்னஞ்சல் மூலம் வந்த வெடிகுண்டு மிரட்டலைத் தொடர்ந்து, போலீசார் கட்டடத்தை சோதனையிட்டனர் மற்றும் "சந்தேகத்திற்கிடமான பொருள்கள் எதுவும்" கிடைக்கவில்லை என்று தெரிவித்தனர். அச்சுறுத்தலைத் தொடர்ந்து பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதேபோன்று செவ்வாய்கிழமை மும்பையில் உள்ள ஜஸ்லோக் மருத்துவமனை, ரஹேஜா மருத்துவமனை, செவன் ஹில் மருத்துவமனை, கோஹினூர் மருத்துவமனை, கேஇஎம் மருத்துவமனை, ஜேஜே மருத்துவமனை மற்றும் செயின்ட் ஜார்ஜ் மருத்துவமனை போன்ற 50 மருத்துவமனைகளுக்கு மருத்துவமனைகளின் படுக்கைகளுக்கு அடியிலும் குளியலறையிலும் வெடிகுண்டுகள் வைக்கப்பட்டிருப்பதாக வெடிகுண்டு மிரட்டல் கடிதம் வந்தது.
தகவல் கிடைத்ததும், போலீஸ் குழு மற்றும் வெடிகுண்டு தடுப்பு பிரிவு மருத்துவமனைகளில் சோதனை நடத்தியது, ஆனால் சந்தேகத்திற்குரிய எதுவும் கிடைக்கவில்லை.
இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருவதாக போலீஸார் தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.