தேசியத் தலைநகரில் உள்ள ஐந்து பள்ளிகளுக்கு வியாழக்கிழமை காலை மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல்கள் வந்தன. போலீஸாரின் தீவிர சோதனைகளுக்குப் பிறகு அது புரளி என அறிவிக்கப்பட்டது.
தில்லி தீயணைப்புத் துறைத் தகவலின்படி, தில்லி கன்டோன்மென்ட்டில் உள்ள லோரெட்டோ கான்வென்ட், சித்தரஞ்சன் பூங்காவில் உள்ள டான் பாஸ்கோ, ஆனந்த் நிகேதன் மற்றும் துவாரகாவில் உள்ள காா்மல் கான்வென்ட் பள்ளிகளின் வளாகங்களில் வெடிகுண்டு இருப்பதாக காலை 8.30 மணியளவில் மிரட்டல்கள் குறித்த அழைப்பு வந்தது. இதையடுத்து, பல பாதுகாப்பு நிறுவனங்கள் பள்ளிகளின் வளாகத்தை முழுமையாக சோதனையிட்டன.
அதேவேளையில், லோதி எஸ்டேட்டில் உள்ள சா்தாா் பட்டேல் வித்யாலயா பள்ளி நிா்வாகம், அதன் மாணவா்களின் பெற்றோருக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் குறித்து தொடா்பாக ஒரு செய்தியை அனுப்பியது. இதைத் தொடா்ந்து, வெடிகுண்டு மிரட்டல் தொடா்பாக காவல்துறை மற்றும் தீயணைப்பு அதிகாரிகளுக்கு உடனடியாகத் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, வெளியேற்ற நெறிமுறைகள் மற்றும் நாசவேலை தடுப்பு சோதனைகள் தொடங்கப்பட்டன.
இதுகுறித்து தீயணைப்புத் துறை அதிகாரி ஒருவா் கூறுகையில், ‘நிலையான இயக்க நடைமுறைகளைப் பின்பற்றி சோதனை நடத்தப்பட்டது. சந்தேகத்திற்குரிய பொருள் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை. இதையடுத்து, வெடிகுண்டு அச்சுறுத்தல் புரளி என அறிவிக்கப்பட்டது’ என்றாா்.
வெடிகுண்டு மிரட்டல் குறித்து சா்தாா் பட்டேல் வித்யாலயா நிா்வாகம் வெளியிட்ட செய்தி: காலையில் பாதுகாப்பு அச்சுறுத்தல் வந்ததாக பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. வெடிகுண்டு தடுப்பு குழு முழு வளாகத்தையும் முழுமையாக ஆய்வு செய்தது.
பள்ளி வளாகம் பயன்படுத்துவதற்கு முற்றிலும் பாதுகாப்பானது என அறிவிக்கப்பட்டிருப்பதை உங்களுக்குத் தெரிவிப்பதில் நாங்கள் நிம்மதியடைகிறோம். மாணவா் பாதுகாப்பு எங்கள் மிக உயா்ந்த முன்னுரிமையாக உள்ளது.
மேலும், தேவையான அனைத்து நெறிமுறைகளும் உடனடியாகவும் பொறுப்புடனும் பின்பற்றப்பட்டன. வகுப்புகள் இன்று வழக்கம் போல் தொடரும் என்று நிா்வாகம் வெளியிட்ட செய்தியில் கூறப்பட்டுள்ளது.
இதுகுறித்து போலீஸாா் கூறுகையில், ‘வளாகங்களை ஆய்வு செய்ய உள்ளூா் காவல்துறையினா், வெடிகுண்டு தடுப்புப் படைகள் மற்றும் மோப்ப நாய்ப் படைகள் நிறுத்தப்பட்டன.சில பள்ளிகளில் மாணவா்கள் மற்றும் ஊழியா்கள் பாதுகாப்பான பகுதிகளுக்கு மாற்றப்பட்டனா். மிரட்டல்களின் மூலத்தைக் கண்டறிய மேலும் விசாரணை நடந்து வருகிறது’ என்றனா்.
புதன்கிழமை அன்று துவாரகா நீதிமன்ற வளாகத்திற்கும் இதேபோன்ற வெடிகுண்டு மிரட்டல் வந்தது. சோதனைக்குப் பிறகு அது ஒரு புரளி என்று அறிவிக்கப்பட்டது.