சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே கண்டதேவி அருள்மிகு சொர்ணமூர்த்தீஸ்வரர் கோயிலில் 17 ஆண்டுகளுக்குப் பிறகு வெள்ளிக்கிழமை காலை நடைபெற்ற தேரோட்டம். 
தற்போதைய செய்திகள்

17 ஆண்டுகளுக்கு பிறகு கண்டதேவி கோயில் தேரோட்டம்: 170 கிராம மக்கள் பங்கேற்பு

17 ஆண்டுகளுக்கு பின் கண்டதேவி அருள்மிகு சொர்னலிங்கேஸ்வரர் ஆலயத்தில் தேரோட்டம் வெள்ளிக்கிழமை(ஜூன் 21) நடைபெற்றது.

DIN

சிவகங்கை: 17 ஆண்டுகளுக்கு பின் கண்டதேவி அருள்மிகு சொர்னலிங்கேஸ்வரர் ஆலயத்தில் தேரோட்டம் வெள்ளிக்கிழமை(ஜூன் 21) நடைபெற்றது. சிவகங்கையை சுற்றியுள்ள 170 கிராமங்களை சேர்ந்த மக்கள் பங்கேற்றனர்.

தேவகோட்டை அருகேயுள்ள கண்டதேவி கிராமத்தில் எழுந்தருளியுள்ள அருள்மிகு பெரியநாயகி அம்பிகா சமேத சொர்ணமூர்த்தீஸ்வரர் ஆலயத்தில் ஆண்டுதோறும் ஆனிமாதம் நடைபெறும் திருவிழாவும், அதனையொட்டி நடைபெறும் தேரோட்டமும் அந்த பகுதியில் மிகவும் பிரபலம்.

இந்தநிலையில், கடந்த 1998 ஆம் ஆண்டு இரு தரப்பினருக்கு இடையே ஏற்பட்ட பிரச்னை காரணமாக தேரோட்டமானது பாதியிலேயே நிறுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து மாவட்ட நிர்வாகத்தின் சமரசப் பேச்சுவார்த்தையால் 2002 முதல் 2006 வரை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் மாவட்ட நிர்வாகமே முன்நின்று தேரோட்டத்தை நடத்தியது.

இந்தநிலையில் கோயில் கும்பாபிஷேக திருப்பணிகள் காரணமாக தேரோட்டம் நிறுத்தப்பட்டு 2012 ஆம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதனிடையே பழைய தேர் பழுதானதாக கூறி தேரோட்டம் நடத்தப்படவில்லை. இதனைத் தொடர்ந்து தேரோட்டத்தில் நீடித்து வந்த பிரச்னை தொடர்பாக உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த நீதிமன்றம் உடனடியாக தேரோட்டம் நடத வேண்டுமென 2020 ஆம் ஆண்டு உத்தரவிட்டது. ஆனால் நிலையில் கரோனா தொற்று காரணமாக தேரோட்டம் நடைபெறவில்லை.

இந்தநிலையில், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிமன்றம் 2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 21 ஆம் தேதி தேரோட்டம் நடத்த மாவட்ட நிர்வாகத்திற்கு உத்தரவிட்டது.

இதையடுத்து, மாவட்ட நிர்வாகம், தேவஸ்தானம், கிராம மக்கள் ஆகியோர் பங்கேற்ற முத்தரப்பு பேச்சுவார்த்தையில், கடந்த பிப்ரவரி 11 ஆம் தேதி தேர் வெள்ளோட்டம் நடைபெற்றது.

இந்தநிலையில், ஜூன் 13 ஆம் தேதி கோயில் திருவிழாவிற்கென காப்புக்கட்டப்பட்டது. அதன்படி ஜூன் 21 ஆம் தேதி தேரோட்டம் வழக்கமாக மாலையில் நடைபெறும் தேரோட்டத்தை காலையில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது.

இதனைத்தொடர்ந்து 17 ஆண்டுகளுக்கு பிறகு வெள்ளிக்கிழமை (ஜூன் 21) காலை தேரோட்டம் அமைதியாக நடைபெற்றது.

பாதுகாப்புப் பணியில் டி.ஐ.ஜி கண்ணன், ஐ.ஜி துரை, மதுரை மாவட்ட எஸ்.பி அரவிந்த், சிவகங்கை எஸ்.பி டோங்க்ரே உமேஷ் பிரவின், மற்றும் 3000-க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டனர். விழாவில்சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித், வருவாய்த்துறையினர், அறநிலையத்துறையினர், தேவஸ்தானம் தரப்பினர் மற்றும் கிராம மக்கள் என அனைவரும் பங்கேற்றனர்.

இதையொட்டி கண்டதேவிகிராமம் முழுவதும் 55 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிகார் தேர்தல்: நிதீஷ் குமார், தேஜஸ்வி யாதவ் வாக்களிப்பு!

நெல்லை அருகே 800 ஆண்டுகள் பழமையான பாண்டியர் கல்வெட்டுகள் கண்டுபிடிப்பு!

அட்டகாசமான வரவேற்பு... டீயஸ் ஈரே வசூல் இவ்வளவா?

வயதான தாயை தூக்கிவந்து வாக்களிக்க வைத்த மகன்! | Bihar | Election

என்னை இந்தியராக சித்தரித்து மோசடி! ஹரியாணா வாக்காளராக இடம்பெற்ற பிரேசில் மாடல்!

SCROLL FOR NEXT