2024 ஜனவரி முதல் தற்போது வரை மொத்தம் 28 இந்திய மீன்பிடி படகுகளையும், 214 இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர் என இலங்கை கடற்படை ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை கடற்படை ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில், 2024 ஜனவரி முதல் மொத்தம் 28 இந்திய மீன்பிடி படகுகளையும், 214 இந்திய மீனவர்களையும் இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
“இலங்கை கடற்பரப்புகளில் சட்டவிரோதமாக அத்துமீறி நுழைந்து மீன் பிடித்ததாக 28 இந்திய மீன்பிடி படகுககளும், 214 இந்திய மீனவர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்” என்றும் சட்டவிரோதமாக எல்லை தாண்டி மீன் பிடிக்கும் நடவடிக்கைகளில் இருந்து தனது கடற்பரப்பை பாதுகாக்கும் பணியில் இலங்கை கடற்படை உறுதியாக உள்ளது,” என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மேலும் இந்திய மீனவர்கள் சர்வதேச கடல் எல்லைக் கோட்டைத் தாண்டி இலங்கை கடற்பரப்பில் சட்டவிரோதமாக மீன்பிடித்து வருவதாக இலங்கை கடற்படை அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இதனிடையே, நாகப்பட்டினம் கடற்கரை காவல் நிலையத்திற்கு உட்பட்ட அக்கரைபேட்டை மீன்பிடித் துறைமுகத்திலிருந்து மீனவ கிராமமான திடீர்குப்பம் பகுதியைச் சேர்ந்த வெற்றிவேல் மகன் ஆனந்தன்(52) என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் ஜூன் 21 ஆம் தேதி அதிகாலை 4 மணியளவில் 10 மீனவர்கள் மீன்பிடிக்கச் சென்றுள்ளனர்.
கடலுக்குச் சென்ற மீனவர்கள், செவ்வாய்க்கிழமை(ஜூன் 25) அதிகாலை 1.30 மணியளவில் கோடியக்கரைக்கு கிழக்கே சுமார் 40 நாட்டிக்கல் தொலைவில் நெடுந்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி இலங்கை கடற்படை மீனவர்கள் படகை விரட்டிச் சென்று பிடிக்க முற்பட்டபோது மீனவர்களை சரணடையுமாறு வலியுறுத்தியுள்ளனர். அப்போது மீனவர்களின் படகு மீது இலங்கை கடற்படை படகு மோதி விபத்து ஏற்பட்டதாகவும், இதன் காரணமாக மீனவர்களுக்கும் கடற்படையினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டதில் படகு வேகமாக மோதியதில் இலங்கை கடற்படை வீரர் ஒருவர் கடலில் விழுந்து பலத்த காயமடைந்த நிலையில் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், உயிரிழந்த இலங்கை கடற்படையின் சிறப்புப் படகுப் படையைச் சேர்ந்த கடற்படை அதிகாரி ரத் சிங், இந்திய மீனவர்களின் விசைப்பட படகில் ஏற முயன்போது, சூழ்ச்சியுடன் 'ஆக்ரோஷமாக' படகை இயக்கியதில் ஏற்பட்ட ‘விபத்தில்’ இலங்கை கடற்படை வீரருக்கு பலத்த காயம் ஏற்பட்டடு உயிரிழந்துள்ளார், படகு சேதம் அடைந்துள்ளதாக இலங்கை கடற்படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
“நாட்டின் கடல் வளங்களை பாதுகாக்கவும் நாட்டு மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கவும் கடற்படையினர் மேற்கொண்ட நடவடிக்கையின் போது அந்த கடற்படை அதிகாரி உயிரிழந்துள்ளார்” என கடற்படை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
உள்நாட்டு மீனவ மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் வகையில் நாட்டின் கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழையும் வெளிநாட்டு மீன்பிடி கப்பல்கள் மற்றும் படகுகள் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளை தடுத்து நிறுத்துவதற்கு கடற்படை மிகவும் கடினமான மற்றும் ஆபத்தான சூழ்நிலைகளுக்கு மத்தியில் பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளது.
இந்த சம்பவத்தில் சட்டவிரோதமாக மீன்பிடித்ததாக இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட மீனவர்களில் நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்த 7 பேரும், கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவர் உட்பட சுமார் 10 மீனவர்களை கடற்படையினர் கைது செய்து அவர்களது படகு மற்றும் மீன்பிடி சாதனங்களை கைப்பற்றி, காங்கேசன்துறை மீன்பிடி துறைமுகத்திற்கு கொண்டுச் செல்லப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்
இந்த நிலையில், இலங்கைக் கடற்படையினரால் தமிழ்நாட்டைச் சேர்ந்த மீனவர்கள் தொடர்ந்து கைது செய்யப்படுவதைத் தடுத்திடவும், தற்போது இலங்கை வசமுள்ள 47 மீனவர்களையும், அவர்களது 166 மீன்பிடிப் படகுகளையும் விடுவித்திட கூட்டுப் பணிக் குழுக் கூட்டத்தை உடனடியாக நடத்துவதற்கும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
அந்த கடிதத்தில், 25.6.2024 தேதி TN-12-MM-5138 என்ற பதிவு எண் கொண்ட விசைப்படகில் மீன்பிடிக்கச் சென்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த 10 மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக வேதனையுடன் குறிப்பிட்டுள்ள முதல்வர், 2024 ஆம் ஆண்டில் மட்டும் இலங்கைக் கடற்படையினரால் இதுவரை 203 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், 27 படகுகள் சிறைபிடிக்கப்பட்டுள்ளதாகவும் கோடிட்டுக் காட்டியுள்ளார்.
இலங்கைக் கடற்படையினரால் இந்திய மீனவர்கள் இதுபோன்று அடிக்கடி கைது செய்யப்படுவது, தமிழ்நாட்டின் மீனவ சமுதாயத்தினரிடையே ஒரு பாதுகாப்பற்ற சூழ்நிலையை ஏற்படுத்தியுள்ளது.
எனவே, இந்த விஷயத்தில் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் உடனடியாக தலையிட்டு, தமிழ்நாட்டைச் சேர்ந்த மீனவர்கள் தொடர்ந்து இதுபோன்று கைது செய்யப்படுவதைத் தடுக்கவும், தற்போது இலங்கை வசமுள்ள 47 மீனவர்களையும், 166 மீன்பிடிப் படகுகளையும் விடுவித்திடவும், கூட்டுப் பணிக்குழு கூட்டத்தைக் கூட்டுவதற்குத் தேவையான நடவடிக்கையை விரைந்து எடுத்திடுமாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது கடிதத்தில் கோரியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.