விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் சனிக்கிழமை ஏற்பட்ட வெடி விபத்தில் 4 பேர் பலியாகினர். மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
விருதுநகர் மாவட்டம், சாத்தூரை அடுத்த பந்த்வார்பட்டி கிராமத்தில் அச்சங்குளத்தைச் சேர்ந்த சகாதேவன்(41)என்பவருக்கு சொந்தமான பட்டாசு தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இந்த பட்டாசு ஆலை மாவட்ட வருவாய் அலுவலரின் உரிமம் பெற்று சிறிய ரக பட்டாசுகள் தயாரிக்கப்பட்டு வருகிறது. இந்த பட்டாசு ஆலையில் சுமார் 15-க்கும் மேற்பட்ட அறைகளில் 50-க்கும் மேற்பட்டோர் பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
சனிக்கிழமை தொழிலாளர்கள் வழக்கம்போல பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். ஓர் அறையில் பட்டாசு தயாரிக்கத் தேவையான பட்டாசு மருந்துகள் கலக்கும் பணியில் புதுசூரங்குடியை சேர்ந்த மாரிச்சாமி(38),அச்சங்குளம் ராஜ்குமார்(45),சத்திரபட்டி மோகன்(40,செல்வக்குமார்(50 ஆகிய 4-பேரும் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, மருந்துக் கலவையில் உராய்வு காரணமாக தீப்பிடித்து வெடி விபத்து ஏற்பட்டது. அந்த அறையில் பற்றிய தீ அடுத்தடுத்த அறைகளுக்கும் பரவியது. இந்த விபத்தில் 3 அறைகள் இடிந்து தரைமட்டமாகின.
இந்த விபத்தில் பட்டாசு மருந்துகள் கலக்கும் பணியில் ஈடுபட்டிருந்த 4 பேரும் பலியாகினர்.
தகவல் அறிந்து சாத்தூர், வெம்பக்கோட்டை, ஏழாயிரம்பண்ணை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் சாத்தூர் தாலுகா காவல் துறையினர்,சாத்தூர் வட்டாட்சியர் லோகநாதன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
பலியான நான்கு பேரின் உடல்களும் உடல்கூறாய்வுக்காக சாத்தூர் அரசு மருத்துவமனையில் வைக்கபட்டுள்ளன.
வெடி விபத்து குறித்து சாத்தூர் தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஏற்கனவே கடந்த மே 9-ஆம் தேதி சிவகாசி அருகே ஏற்பட்ட வெடி விபத்தில் 12 பேர் உயிரிழந்த நிலையில், தற்போது ஏற்பட்ட வெடி விபத்தில் 4 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.