கோவையில் நடைபெற்ற பிரதமா் நரேந்திர மோடியின் வாகன பிரசார நிகழ்ச்சியில் பள்ளி குழந்தைகளை பங்கேற்க அழைத்து வந்த மூன்று தனியார் பள்ளிகள் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
கோவையில் திங்கள்கிழமை நடைபெற்ற பிரதமரின் வாகன பிரசார நிகழ்ச்சியின்போது சாய்பாபா காலனி பகுதியில் பிரதமரை வரவேற்க அதே பகுதியை சோ்ந்த தனியாா் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவ, மாணவியா் அழைத்து வரப்பட்டிருந்தனா்.
இந்த சம்பவம் தொடா்பாக உரிய விசாரணை நடத்த கல்வித் துறை அதிகாரிகளுக்கு கோவை மாவட்ட ஆட்சியரும், மாவட்ட தோ்தல் அதிகாரியுமான கிராந்திகுமாா் பாடி உத்தரவிட்டாா். இதையடுத்து குழந்தைகள் நல பாதுகாப்பு குழு அதிகாரிகள் சாய்பாபா காலனி காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா்.
அந்த புகாரின் பேரில் சம்பந்தப்பட்ட அரசு உதவி பெறும் பள்ளி நிா்வாகம் மீது சாய்பாபா காலனி போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.
இந்தநிலையில், பள்ளி மாணவா்களிடம் கட்சிக் கொடி, சின்னத்தை அளித்து, கடவுள் வேடங்களை அணியச் செய்து, பள்ளிப் பேருந்தில் அழைத்து வந்து பிரசாரத்தில் ஈடுபடுத்தியதாக கோவை வடவள்ளி பகுதியில் உள்ள ஒரு தனியாா் பள்ளி நிா்வாகத்திடம் விளக்கம் கேட்டு புதன்கிழமை நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
இந்தநிலையில்,கோவை வடவள்ளி, ஆர்.எஸ்.புரம் பகுதிகளில் உள்ள மூன்று தனியார் பள்ளிகள் மீதும் தனித்தனியாக குழந்தைகள் நல சட்டம் பிரிவு 75-ன் கீழ் சாய்பாபா காலனி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடந்தி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.