தில்லி மற்றும் உத்தரப்பிரதேசத்தில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்கையில், கடந்த 10 நாட்களில் 8 பேர் இறந்துள்ளனர். எனவே, பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல் துப்புரவு தொழிலாளர்களைப் பணி செய்யக் கட்டாயப்படுத்துபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தலித் ஆதிவாசி சக்தி அதிகார மஞ்ச் (தசம்) எனப்படும் அமைப்பின் கீழ் பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய சமூக ஆர்வலர்கள், பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல் துப்புரவுத் தொழிலாளர்களைப் பணி செய்யக் கட்டாயப்படுத்தும் குற்றவாளிகளைக் கண்டறிந்து அவர்கள் மீது, கையால் மலம் அள்ளுவோர் பணித்தடை மற்றும் மறுவாழ்வு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவர்களுக்குத் தகுந்த தண்டனை அளிக்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.
மேலும், “கடந்த மே 2 அன்று, 57 வயது முதியவரும், 30 வயதான அவரது மகனும் லக்னௌவின் வாசிர்காங் பகுதியில் கழிவுநீர்த் தொட்டியில் வேலை செய்தபோது உயிரிழந்துள்ளனர். அந்த பகுதிக்கு 2 மணி நேரத்திற்கு எந்த அதிகாரியும் செல்லவில்லை. அவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படும்போது இருவரும் இறந்துவிட்டனர்” என்றனர்.
உச்சநீதிமன்ற மூத்த வழக்கறிஞரும், மனித உரிமைகள் சட்ட அமைப்பின் நிறுவனருமான காலின் கான்சலேவ் பேசுகையில், “எந்த வழிகாட்டு நெறிமுறைகளும், பாதுகாப்பு உபகரணங்களும், ஆக்ஸிஜன் உதவியும் இல்லாமல் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்ய தொழிலாளர்கள் கட்டாயப்படுத்தப்படுவது மிகவும் தவறானது” என்றார்.
சுயாதீன பத்திரிகையாளரான ராதிகா போர்டியா,”கடந்த மே 3 அன்று, நொய்டாவில் உள்ள தனியார் குடியிருப்பில் இரண்டு தினக்கூலித் தொழிலாளர்கள் கழிவுநீர்த் தொட்டியைச் சுத்தம் செய்கையில் விஷவாயு தாக்கி இறந்துள்ளனர்.
அதேபோல, முகால்சராய் பகுதியில் நான்கு பேர் தனியார் குடியிருப்பில் விஷவாயு தாக்கி இறந்துள்ளனர். மே 12 அன்று தில்லி ரோஹினி பகுதியிலும் ஒரு தொழிலாளி விஷவாயு தாக்கி இறந்துள்ளார்.
இதுபோன்ற, இறப்புகள் தொடர்ந்து நிகழ்ந்தாலும் சட்டரீதியாக சரியான நடவடிக்கைகள் எடுக்கப்படுவதில்லை. கையால் மலம் அள்ளுவோர் பணித்தடை மற்றும் மறுவாழ்வு சட்டத்தின் கீழ் இறந்தவர்களின் குடும்பத்தில் உள்ளவர்களுக்கு அரசு வேலை வழங்கவேண்டும் என்று சட்டம் கூறுகின்றது. ஆனால் அது முறையாக செயல்படுத்தப்படுவதில்லை” என்று ஆதங்கப்பட்டார்.
இதுபோன்ற வழக்குகளில் நீதியைப் பெற துப்புரவுத் தொழிலாளர்கள் சங்கமாக ஒன்றிணைய வேண்டும் என்று தசம் அமைப்பினர் தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.