பஞ்சாப், மேற்கு வங்கத்தில் பொது வேலைவாய்ப்பில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இடஒதுக்கீட்டை உயர்த்தி வழங்க தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் பரிந்துரைத்துள்ளது.
தற்போதைய இடஒதுக்கீடுக் கொள்கைகள், வாய்மொழி உத்தரவுகள் மற்றும் ஆவண ஆதாரங்கள் போன்றவற்றை ஆய்வு செய்தும், இந்திரா சாவ்னி வழக்கின் உச்சநீதிமன்ற உத்தரவுடன் ஒத்துப்போவதைக் கருதியும் ஆணையத்தின் சார்பில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது பஞ்சாபில், பொது வேலைவாய்ப்பில் பட்டியல் வகுப்பினருக்கு 25 சதவீதமும், இதர பிற்படுத்தப்பட்டவர்களுக்கு 12 சதவீதமும், மொத்தமாக 37 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது.
அதில் இதர பிற்படுத்தப்பட்டவர்களுக்கு 13 சதவீதம் இடஒதுக்கீட்டை உயர்த்தி, மொத்தம் 25 சதவீதமாக வழங்க தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் பரிந்துரைத்துள்ளது.
உச்சநீதிமன்ற உத்தரவின்படி கல்வி மற்றும் சமூகத்தில் பின்தங்கிய வகுப்பினருக்கான 50 சதவீத இடஒதுக்கீட்டு உச்சவரம்பின்படி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
பஞ்சாப் அரசின் கூடுதல் தலைமைச் செயலாளர் டி.கே.திவாரி கடந்த பிப்ரவரி 22 அன்று ஆணையத்தின் முன் ஆஜராகி, இடஒதுக்கீடு உயர்வைச் செயல்படுத்த அரசின் உறுதிப்பாட்டைத் தெரிவித்தார்.
மேற்கு வங்கத்தின் இதர பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் புதிதாக 35 சமூகங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. இன்றுவரை, பிற்படுத்தப்பட்டோர் மாநிலப் பட்டியலில் 143 சமூகங்கள் உள்ளன. இதில், இஸ்லாம் மதத்தின் 83 சமூகங்களும் அடங்கும்.
மேற்கு வங்கத்தின் மாநிலப் பட்டியலில் மொத்தமாக 173 பிற்படுத்தப்பட்ட சமூகங்கள் உள்ளன. இதில் ‘ஏ’ வகைமையில் உள்ள ‘மிகவும் பிற்படுத்தப்பட்ட’ பிரிவில் 81 சமூகங்கள் அடங்கும். இதனுள், 73 சமூகங்கள் இஸ்லாம் மதத்தைச் சேர்ந்தவை. ‘பி’ வகைமையில் உள்ள ‘பிற்படுத்தப்பட்ட’ பிரிவில் 98 சமூகங்கள் அடங்கும். இதனுள், 45 சமூகங்கள் இஸ்லாம் மதத்தைச் சேர்ந்தவை.
இந்தப் பிரிவுகளில், மிகவும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு 10 சதவீதமும், பிற்படுத்தப்பட்டவர்களுக்கு 7 சதவீதமும் இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது.
மேலும், மேற்கு வங்கத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் நிறுவனங்களில் உள்ள பொறுப்புகளில் பட்டியல் சமூகம், பழங்குடியினர் மற்றும் இதர பிற்படுத்தப்பட்டவர்களுக்கான இடஒதுக்கீடு முறையே 22, 6, 17 சதவீதங்கள் ஆகும்.
‘வெளியிடப்பட்ட அறிவிப்புகளின் மூலம், மேற்கு வங்கத்தில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 17 சதவீத இடஒதுக்கீடு பொது வேலைவாய்ப்பில் உறுதிப்படுத்தபட்டுள்ளது. தற்போது, மேற்கு வங்கத்தில் பொது வேலைவாய்ப்பில் பட்டியலினத்தவர், பழங்குடியினர், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான மொத்த இடஒதுக்கீடு 45 சதவீதமாகும்’ என்று ஆணையம் தெரிவித்துள்ளது.
மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள பொது வேலைவாய்ப்பில், உச்சநீதிமன்ற உத்தரவான 50 சதவீத இடஒதுக்கீட்டில், மீதமுள்ள 5 சதவீத இடஒதுக்கீடு இதர பிற்படுத்தப்பட்டவர்களுக்கு உயர்த்தி வழங்கப்படலாம் என்று தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் கணித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.