வாக்குச் செலுத்தாவிட்டால் தண்டனை: நடிகர் பரிந்துரை!
வாக்குச் செலுத்தாதவர்களுக்குத் தண்டனை கொடுக்க வேண்டுமென்று நடிகர் பரேஷ் ராவல் கூறியுள்ளார்.
மக்களவைத் தேர்தலின் ஐந்தாம் கட்ட வாக்குப்பதிவு பல மாநிலங்களில் இன்று நடைபெற்று வருகிறது.
இதைத் தொடர்ந்து, மும்பையில் தனது வாக்கினை பதிவு செய்துவிட்டு பத்திரிகையாளர்களிடம் பேசிய பாஜகவின் முன்னாள் மக்களவை உறுப்பினரும், நடிகருமான பரேஷ் ராவல் மக்கள் தேர்தலில் பங்குபெறுவதன் அவசியத்தைக் குறித்துப் பேசியவர், “அரசாங்கம் எதையும் செய்வதில்லை என்று நீங்கள் கூறுவீர்கள். ஆனால் இன்று நீங்கள் வாக்கு செலுத்தவில்லையென்றால், அதற்கு நீங்கள் மட்டுமே பொறுப்பு. அரசாங்கம் அல்ல” என்றார்.
மேலும், ”வாக்களிக்க வராதவர்களுக்கு வரியை அதிகப்படுத்துவது அல்லது வேறு தண்டனைகள் கொடுக்கப்பட வேண்டும்” என்றும் கூறினார்.
பல்வேறு இந்தி படங்களில் முக்கிய வேடங்களில் நடித்துள்ள பரேஷ் ராவல், தமிழில் சூரரைப் போற்று திரைப்படத்தில் நடித்துள்ளார்.
பரேஷ் ராவல் பேசியது தற்போது சமூக வலைதளங்களில் விமர்சிக்கப்பட்டு வருகிறது.