யமுனை நதியிலிருந்து தில்லிக்குக் கிடைக்கும் நீரை நிறுத்தி, பாஜக சதி செய்யத் திட்டமிட்டிருப்பதாக ஆம் ஆத்மி கட்சியின் அமைச்சர் அதிஷி தெரிவித்துள்ளார்.
இன்று பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பேசிய அமைச்சர் அதிஷி கூறுகையில், “மே 25 தில்லியில் மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு நடக்க இருப்பதைத் தொடர்ந்து ஆம் ஆத்மியைக் குறி வைத்தும், மக்களைத் தொந்தரவு செய்யவும் பாஜக சதித் திட்டம் தீட்டுகிறது. ஹரியானாவில் ஆட்சியில் உள்ள பாஜக அரசு, யமுனை ஆற்றின் மூலம் தில்லிக்கு வரும் தண்ணீரை நிறுத்தியுள்ளது.
இதன் மூலம், தண்ணீர் பஞ்சத்தை ஏற்படுத்தி தில்லி மக்களுக்கு இடையூறு ஏற்படுத்த திட்டமிட்டுள்ளனர். தற்போது யமுனை நதியிலிருந்து வரும் தண்ணீர் நிறுத்தப்பட்டுள்ளது. ஹரியானா அரசு தில்லிக்கு வரும் தண்ணீரை நிறுத்தியுள்ளது விசாரணையில் தெரிய வந்துள்ளது” என்றார்.
மேலும், “தில்லியில் யமுனை நதியின் கொள்ளளவு 671 அடிக்கு கீழ் செல்வது இதுவே முதல்முறை. தற்போது அதன் அளவு 670.9 அடி உள்ளது.
இந்த விவகாரம் குறித்து ஹரியானா அரசுக்குக் கடிதம் எழுதவுள்ளோம். தேவைப்பட்டால், நீதிமன்றத்தில் அவசர மனுத் தாக்கல் செய்து தீர்வு காண்போம். அதிலும், நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் உச்சநீதிமன்றத்தை நாடுவோம்.
பாஜகவின் சதியில் சிக்கிக் கொள்ள வேண்டாம் என்று தில்லி மக்களை நான் எச்சரித்துக் கொள்கிறேன். தில்லி மக்கள் முட்டாள்கள் அல்ல. அவர்கள் தில்லியின் 7 மக்களவைத் தொகுதிகளிலும் இந்தியா கூட்டணியை வெற்றிபெறச் செய்வார்கள் என பாஜகவினருக்கு சொல்லிக் கொள்கிறேன்” என்று பேசினார்.
தில்லியில் தண்ணீர் பஞ்சம் ஏற்படாமல் தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து கேட்டபோது, “தில்லி முழுக்க தண்ணீர் கொண்டு செல்லும் டேங்கர் வாகனங்களின் எண்ணிக்கையை உடனடியாக அதிகரிக்க நீர் மேலாண்மைத் துறை தலைமை அதிகாரிக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், நிலத்தடி நீர் பயன்பாட்டு நேரத்தை 16-ல் இருந்து 20 மணி நேரமாக உயர்த்தியுள்ளோம்” என்று அதிஷி கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.