முகப்பு
தற்போதைய செய்திகள்

திருச்செந்தூர் வைகாசி விசாகம்:லட்சக்கணக்கான பக்தர்கள் புனித நீராடி சுவாமி தரிசனம்

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் வைகாசி விசாகத்திருவிழாவை முன்னிட்டு லட்சக்கணக்கான பக்தர்கள் கடலில் புனித நீராடி சுவாமி தரிசனம் செய்தனர்.

Updated On : 22 மே, 2024 at 9:47 PM
வைகாசி விசாகத்திருவிழாவை முன்னிட்டு புதன்கிழமை அதிகாலையில் திருச்செந்தூர் கடலில் புனித நீராடிய லட்சக்கணக்கான பக்தர்கள்.
பகிர்:

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் வைகாசி விசாகத்திருவிழாவை முன்னிட்டு லட்சக்கணக்கான பக்தர்கள் கடலில் புனித நீராடி சுவாமி தரிசனம் செய்தனர்.

தமிழ்க்கடவுள் முருகப்பெருமான் அவதரித்த ஜென்ம நட்சத்திர திருவிழாவான வைகாசி விசாகத் திருவிழா வசந்த விழாவாக கடந்த மே மாதம் 13 ஆம் தேதி தொடங்கி, பத்து நாட்கள் நடைபெற்றது. விசாகத் திருவிழாவை முன்னிட்டு புதன்கிழமை(மே 22) அதிகாலை 1 மணிக்கு நடை திறக்கப்பட்டு, 1.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 4 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம், தொடர்ந்து பூஜைகள் நடைபெற்றது. காலை 10 மணிக்கு உச்சிக்கால அபிஷேகம், தீபாராதனையைத் தொடா்ந்து, சுவாமி ஜெயந்திநாதா் கோயிலில் இருந்து தங்கச் சப்பரத்தில் எழுந்தருளி வசந்த மண்டபம் சேர்ந்து, அங்கு மாலையில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார, தீபாராதனையாகி சுவாமி வசந்த மண்டபத்தை 11 முறை சுற்றி வலம் வரும் வைபவமும், விழாவின் முக்கிய நிகழ்வான முனிக்குமாரர்களுக்கு சாப விமோசனம் அளிக்கும் வைபவமும் நடைபெறுகிறது. தொடா்ந்து மகா தீபாராதனையாகி தங்கச் சப்பரத்தில் சுவாமி ஜெயந்திநாதா், வள்ளி, தேவசேனா அம்மனுடன் எழுந்தருளி கிரிவீதி வலம் வந்து கோயில் சோ்கிறாா்.

வைகாசி விசாகத்திருவிழாவில் சுவாமியை தரிசனம் செய்வதற்காகவே கடந்த சில நாள்களாவே திருச்செந்தூருக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து பக்தர்கள் விரதமிருந்து, பாதயாத்திரையாக வந்த லட்சக்கணக்கான பக்தர்கள் புதன்கிழமை அதிகாலையில் இருந்த கடலில் புனித நீராடி நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். பக்தா்கள் வெள்ளத்தில் கோயில் வளாகமே நிரம்பியுள்ளது.

பக்தர்கள் காவடி எடுத்தும், அலகு குத்தியும், அங்க பிரதட்சனம் எடுத்தும் முருகனை வழிபட்டனர்.

பாதுகாப்பு பணியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் தலைமையிலான காவல்துறையினர் ஈடுபட்டனர்.

விழாவிற்கான ஏற்பாடுகளை திருக்கோயில் அறங்காவலர் குழுத் தலைவர் ரா.அருள்முருகன், இணை ஆணையர் மு.கார்த்திக், அறங்காவலர்கள் அனிதா குமரன்,பா.கணேசன், ந.ராமதாஸ், வி.செந்தில்முருகன் மற்றும் திருக்கோயில் பணியாளர்கள் செய்திருந்தனர்.

முழு கட்டுரையைப் படிக்க →