ஐபிஎல்லில் கடந்த 7 சீசன்களாக தில்லி கேப்பிடல்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக செயல்பட்டு வரும் ரிக்கி பாண்டிங், இதற்கு முன்னர் ஆஸ்திரேலிய டி20 கிரிக்கெட் அணியின் இடைக்காலப் பயிற்சியாளராகவும் செயல்பட்டு வந்தார். இந்த நிலையில் இந்தியத் தலைமைப் பயிற்சியாளர் ஆவதற்கான வாய்ப்பைத் தான் நிராகரித்ததாகக் கூறியுள்ளார்.
”ஒரு தேசிய அணியின் தலைமை பயிற்சியாளராக எனக்கு விருப்பம்தான். ஆனால் எனக்கு வேறு சில விஷயங்களும் என் வாழ்வில் இருக்கின்றன. என்னுடைய குடும்பத்தினருடன் நேரம் செலவளிக்க நான் விரும்புகிறேன். அனைவருக்கும் தெரியும், இந்திய அணிக்குப் பயிற்சியாளராகிவிட்டால் ஐபிஎல் அணியில் இருக்கக்கூடாது. அதிலிருந்தும் நான் வெளியேற வேண்டியிருக்கும்.
அது மட்டுமின்றி, தேசிய அணிக்கான தலைமைப் பயிற்சியாளர் பதவியில் ஒரு ஆண்டில் 10 - 11 மாதங்கள் வேலை செய்ய வேண்டியிருக்கும். எனக்கு அதைச் செய்ய விருப்பமிருந்தாலும், என்னுடைய தற்போதைய வாழ்க்கை முறைக்கு அது சரிப்பட்டு வராது” என்று தெரிவித்தார்.
மேலும், “என் குடும்பத்தினர் மற்றும் என் குழந்தைகள் கடந்த ஐந்து வாரங்களாக ஐபிஎல்லில் என்னுடன் இருந்தனர். ஆண்டுதோறும் தவறாமல் என்னுடன் வந்து விடுவார்கள். எனக்கு இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் பதவி வழங்கப்பட இருப்பதாக என் மகனிடம் சொன்னபோது, ’அதை ஏற்றுக்கொள்ளுங்கள். அப்போது தான் அடுத்த இரண்டு ஆண்டுகள் நாங்களும் இந்தியாவில் இருக்க முடியும்’ என்று கூறினான்.
என் குழந்தைகள் இந்தியாவில் இருப்பதையும், இங்குள்ள கிரிக்கெட் கலாச்சாரத்தையும் அந்தளவு நேசிக்கின்றனர். ஆனால், என்னுடைய தற்போதைய வாழ்க்கை முறையில் அது சரியாக இருக்காது” என்றார்.
”ஜஸ்டின் லாங்கர், ஸ்டீஃபன் ஃப்ளெமிங் பெயர்களும் பயிற்சியாளர் பரிந்துரையில் இருப்பதைப் பார்த்தேன். கடந்த 2 நாள்களாக கவுதம் கம்பீர் பெயரும் இந்த பதவிக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. ஆனால், நான் சொன்ன காரணங்களால் எனக்கு அது சாத்தியமில்லை என்று நினைக்கிறேன்” என்று பாண்டிங் கூறினார்.
தலைமை பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி மே 27 என்று பிசிசிஐ அறிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.