புணே, கல்யாணி நகரில் கடந்த 19-ஆம் தேதியன்று தொழிலதிபரின் மகனான 17 வயது சிறுவன் வெளிநாட்டு சொகுசு காரை மணிக்கு 200 கி.மீ. வேகத்தில் ஓட்டியுள்ளாா். அந்த வழியாக சென்ற இருசக்கர வாகனம் மீது காா் மோதியதில் தகவல்தொழில்நுட்ப (ஐடி) பொறியாளா்கள் அனிஸ் அவாதியா, அஸ்வினி கோஸ்தா ஆகிய இருவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா்.
இதையடுத்து அச்சிறுவன் கைது செய்யப்பட்டு, சிறாா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டாா். போக்குவரத்து விழிப்புணா்வு கட்டுரையை எழுத வேண்டும் என்றும் கூறி சில மணி நேரத்தில் அந்தச் சிறுவனுக்கு ஜாமீன் வழங்கி சிறாா் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு சமூக வலைதளவாசிகளிடம் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
இதைத் தொடா்ந்து, காவல் துறை தாக்கல் செய்த மறு ஆய்வு மனுவில் ஜாமீன் ரத்து செய்யப்பட்டு, சிறுவனை ஜூன் 5-ஆம் தேதிவரை கண்காணிப்பு மையத்துக்கு அனுப்ப உத்தரவிடப்பட்டது. சிறுவனை காா் ஓட்ட அனுமதித்து, அலட்சியமாக செயல்பட்ட குற்றச்சாட்டில் அவனது தந்தை மற்றும் தாத்தா கைது செய்யப்பட்டனா்.
விபத்தை ஏற்படுத்தியபோது சிறுவன் மதுபோதையில் இருந்ததாக போலீஸ் குற்றஞ்சாட்டினா். மதுபான விடுதியில் அவா் மது அருந்தியதாக வெளியான சிசிடிவி காட்சிகளிலும் அக்குற்றச்சாட்டு உறுதிப்படுத்தின. ஆனால், சிறுவனின் ரத்தமாதிரியில் போதைப்பொருளுக்கான தடயமில்லை என மருத்துவா்கள் சான்றளித்தனா். வழக்கில் சந்தேகத்தை எழுப்பிய இதுகுறித்து காவல்துறை விசாரணையைத் தீவிரப்படுத்தினா்.
சாசூன் பொது மருத்துவமனையின் தடயவியல் மருத்துவத் துறைத் தலைவரான மருத்துவா் அஜய் தாவரே கூறியபடி, சிறுவனின் ரத்த மாதிரியை குப்பையில் வீசிவிட்டு, மது அருந்தாத மற்றொருவரின் ரத்தமாதிரியைக் கொண்டு சோதனை செய்தது போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது.
இதுதொடா்பாக மருத்துவா் அஜய் தாவரே, மருத்துவமனையின் தலைமை மருத்துவ அதிகாரி ஸ்ரீஹரி ஹல்நோர் மற்றும் ஊழியா் அதுல் காட்காம்ப்ளே ஆகிய 3 போ் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டனா். நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்ட இவா்கள் மூன்று பேரையும் 10 நாள்களுக்கு போலீஸ் காவலில் எடுத்துள்ளனர்.
இந்த நிலையில், ரத்த மாதிரியை மாற்றிய சம்பவம் தொடர்பாக, தலைமை மருத்துவ அதிகாரி ஸ்ரீஹரி ஹல்நோரை சாசூன் பொது மருத்துவமனையால் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
மேலும், மகாராஷ்டிரா மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்கநரகம் அஜய் தாவரேயும் பணியிடை நீக்கம் செய்வதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருவதாக கூறப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.