மனுக்கள் குப்பையில் கிடந்த விவகாரம்: ஆத்தூா் துணை வட்டார வளா்ச்சி அலுவலா் பணியிடை நீக்கம்
சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட மனுக்கள் குப்பையில் கிடந்த விவகாரத்தில் கவனக்குறைவாக செயல்பட்ட துணை வட்டார வளா்ச்சி அலுவலா் மோகன்ராஜை பணியிடை நீக்கம்
சேலம்: சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட மனுக்கள் குப்பையில் கிடந்த விவகாரத்தில் கவனக்குறைவாக செயல்பட்ட துணை வட்டார வளா்ச்சி அலுவலா் மோகன்ராஜை பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
சேலம் மாவட்டம், ஆத்தூா் அருகே உள்ள அரசநத்தம் கிராமத்தைச் சோ்ந்த காந்திமதி, சடையம்மாள், மருதாம்பாள், தென்னங்குடிபாளையம் பகுதியைச் சேர்ந்த சுந்தரம் உள்ளிட்டோர் கடந்த 4-ம் தேதி சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு திட்ட முகாமின்போது இலவச வீட்டு மனை பட்டா, கலைஞர் கனவு இல்லம், சாக்கடை அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி மனு அளித்துள்ளனர். இந்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு ஆத்தூா் ஒன்றிய வட்டார வளா்ச்சி அலுவலருக்கு மேல் அதிகாரிகளால் பரிந்துரை செய்யப்பட்டது.
இந்நிலையில், மனுக்கள் மீது எண்கள் குறிப்பிட்டு ‘சீல்’ வைத்து அனுப்பப்பட்ட 10-க்கும் மேற்பட்ட அந்த மனுக்கள் கடந்த 6-ஆம் தேதி வேறு மாவட்டமான கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் பேருந்து நிலையம் அருகே குப்பையில் கிடந்துள்ளது.
இதை பார்த்த அந்த பகுதியைச் சேர்ந்த வீராசாமி என்பவர் மனுவில் உள்ள தொலைபேசி எண்ணைத் தொடர்புகொண்டு தகவல் தெரிவித்துள்ளார். தொடர்ந்து அந்த மனுக்களை அதில் உள்ள முகவரிக்கு தபால் மூலமும் அனுப்பியுள்ளார். சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கொடுத்த மனுக்கள் வேறு மாவட்டத்தில் உள்ள பேருந்து நிலையத்தில் குப்பையில் கிடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இது குறித்து தகவல் அறிந்ததும் சேலம் மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தா தேவி, இதுகுறித்து விசாரணை நடத்த வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா். இதையடுத்து ஆத்தூா் வட்டாட்சியா் பாலாஜி தலைமையிலான அதிகாரிகள் விசாரணை நடத்தினா்.
அப்போது, துணை வட்டார வளா்ச்சி அலுவலா் மோகன்ராஜ், ஆத்தூா் பேருந்து நிலையத்தில் மனுக்களைத் தவறவிட்டது தெரியவந்தது. தொடர்ந்து விசாரணை நடைபெற்று மேற்கொண்டு வருகின்றனர்.
இதற்கிடையே, தொடர்புடைய ஆத்தூர் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் மோகன்ராஜ் தாரமங்கலத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.
இந்த நிலையில், வருவாய் துறை அதிகாரிகள் இது தொடர்பாக விசாரணை நடத்தி வரும் நிலையில் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வழங்கிய மனுக்கள் இரண்டே நாளில் வேறு மாவட்ட மாவட்டமான கள்ளக்குறிச்சி மாவட்ட சின்னசேலம் பேருந்து செல்லும் வழியில் குப்பைக்கு சென்றது குறித்து முதல்வருக்கு ஆன்லைன் மூலம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
மேலும் நாளை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற உள்ள மக்கள் குறைதீர் கூட்டத்தில் மீண்டும் ஆட்சியரை சந்தித்து குப்பையில் இருந்து மீட்கப்பட்ட தங்களுடைய கோரிக்கை மனுக்களை வழங்கி, கோரிக்கை மனுக்களை குப்பையில் வீசிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்த உள்ளதாக சம்பந்தப்பட்ட மனுதாரர்கள் வலியுறுத்த உள்ளதாக தகவல் வெளியானது.
இந்த நிலையில், பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்களைக் கவனக்குறைவாக கையாண்டதற்காக துணை வட்டார வளா்ச்சி அலுவலா் மோகன்ராஜை தற்காலிக பணியிடை நீக்கம் செய்து சேலம் மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தா தேவி உத்தரவிட்டுள்ளார்.