முகப்பு
தற்போதைய செய்திகள்

சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவு! தாய் உள்பட மூவர் கைது!

தந்தை, மகன், மாணவிகளின் தாய் ஆகிய 3 பேர் கைது.

Updated On : 13 நவம்பர், 2024 at 9:25 AM
சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவு.
பகிர்:

கரூர்: கரூர் மாவட்டம் குளித்தலை அருகே அரசுப் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த தந்தை, மகன் மற்றும் மாணவிகளின் தாய் ஆகியோரை போலீஸார் கைது செய்தனர்.

கரூர் மாவட்டம் குளித்தலை அனைத்து மகளிர் காவல் நிலையம் சார்பில் குளித்தலை வட்டத்திற்குள்பட்ட பகுதிகளில் செயல்படும் அரசுப் பள்ளிகளில் போக்ஸோ சட்டம் குறித்து பள்ளி மாணவ - மாணவிகளிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்கள்.

இந்நிலையில் செவ்வாய்க்கிழமை காலை தோகமலை அருகே உள்ள ஒரு அரசுப் பள்ளியில் குளித்தலை அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸார் போக்ஸோ சட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திக் கொண்டிருக்கையில் பள்ளியில் பயிலும் பிளஸ் -1 மாணவி ஒருவர் போலீஸாரிடம் தன்னையும் தனது தங்கையையும் தனது சித்தப்பா செல்வம் மற்றும் அவரது மகனான எங்கள் பள்ளியில் பயிலும் பிளஸ் 1 மாணவர் ஆகிய இரண்டு பேரும் சேர்ந்து நாள்தோறும் பாலியல் தொந்தரவு கொடுப்பதாகவும், இதற்கு எங்களது தாய் ஜோதி உடந்தையாக இருப்பதாகவும் கூறியுள்ளார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த மகளிர் காவல் நிலைய போலீஸார், உடனே இது தொடர்பாக கரூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு சமூகப் பணியாளர் கனகவல்லிக்கு தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து கனகவல்லி அளித்த புகாரின் பேரில் குளித்தலை அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸார் செல்வம் மற்றும் அவரது மகன் பிளஸ் 1 மாணவர் மற்றும் இவர்களுக்கு உடந்தையாக இருந்த மாணவிகளின் தாய் ஜோதி ஆகியோரை நள்ளிரவில் கைது செய்தனர்.

பின்னர் செல்வம், அவரது மகன் மற்றும் ஜோதி ஆகியோரை கரூர் மகளிர் விரைவு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

பின்னர், நீதிபதி உத்தரவின் பேரில் மூவரும் சிறையில் அடைக்கப்பட்டனர். இதில் பிளஸ் 1 மாணவர் திருச்சி சிறுவர் நல சீர்திருத்தப் பள்ளி சிறையில் அடைக்கப்பட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.