சூலூர்: சூலூர் அருகே சோமனூரில் மது போதையில் இருவருக்கிடையே ஏற்பட்ட மோதலில் ஒருவர் கல்லால் அடித்துக் கொலை செய்யப்பட்டார்.
சூலூர் அருகே சோமனூர் ஆத்துப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் முருகசாமி மகன் கோகுல் (26). இவர் திருப்பூரில் உள்ள ஒரு நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவர் வீட்டுக்கு அருகாமையில் பெருமாள் கோயில் வீதியில் சாமன் என்பவரது மகன் துரைசாமி (40) வசித்து வருகிறார்.
இவர் சுமை தூக்கும் தொழிலாளியாக உள்ளார். இருவரும் சனிக்கிழமை இரவு பெருமாள் கோயில் பின்புறம் உள்ள பகுதியில் ஒன்றாக மது அருந்தி உள்ளனர். அப்போது இருவருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் திடீரென துரைசாமி அருகில் இருந்த ஹாலோ பிளாக் கல்லை எடுத்து கோகுலை தாக்கியுள்ளார்.
மது போதையில் இருந்த கோகுல், துரைசாமி தாக்கியதுடன் நிலைகுலைந்து கீழே விழுந்தார். இதில் கோகுலுக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இந்த சத்தம் கேட்டு அருகில் இருந்த கோகுலின் தம்பி கார்த்தி வந்து பார்த்து, அருகில் இருப்பவர்களை அழைத்துள்ளார்.
அவர்களின் உதவியுடன் கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கோகுலை எடுத்துச் சென்றனர். அங்கே பரிசோதித்த மருத்துவர்கள் கோகுல் ஏற்கனவே இறந்து விட்டார் எனத் தெரிவித்துள்ளனர்.
இதனை அடுத்து கருமத்தம்பட்டி போலீஸாருக்கு இது பற்றி தகவல் தெரிவித்தனர். போலீஸார் கோகுலின் உடலை கைப்பற்றி உடல் கூறு ஆய்வு பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும், விசாரணையில் துரைசாமி தாக்கியது தெரியவந்த நிலையில், உடனடியாக கருமத்தம்பட்டி உட்கோட்டை டிஎஸ்பி தங்கராமன் உத்தரவின் பேரில் கருமத்தம்பட்டி ஆய்வாளர் சண்முகவேலு மற்றும் உதவி ஆய்வாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் விரைந்து சென்று துரைசாமியை கைது செய்தனர்.
எதற்காக துரைசாமி கோகுலை கொலை செய்தார் என தற்போது விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.