நாமக்கல் நரசிம்மர் சுவாமி கோயில் திருத்தேரோட்டத்தை முன்னிட்டு தேரை வடம் பிடித்து இழுத்த பக்தர்கள். 
தற்போதைய செய்திகள்

நாமக்கல் நரசிம்மர் சுவாமி கோயில் தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது

நாமக்கல் நரசிம்மர் கோயில் திருத்தேரோட்டம் சனிக்கிழமை கோலாகலமாக நடைபெற்றது. கோவிந்தா கோஷம் முழங்க ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்து தேரை இழுத்தனர்.

DIN

நாமக்கல்: நாமக்கல் நரசிம்மர் கோயில் திருத்தேரோட்டம் சனிக்கிழமை கோலாகலமாக நடைபெற்றது. கோவிந்தா கோஷம் முழங்க ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்து தேரை இழுத்தனர்.

நாமக்கல் மலையின் ஒரு புறத்தில், குடவறைக் கோயில்களான நரசிம்ம சுவாமி, நாமகிரி தாயார் சன்னதியும், மற்றொரு புறத்தில் அரங்கநாதர் சன்னதியும் அமைந்துள்ளன. நரசிம்மர் கோயிலின் முன்புறம் 18 அடி உயரத்தில் ஆஞ்சனேயர் சுவாமி கம்பீரமாக எழுந்தருளியுள்ளார்.

இந்த கோயில்களுக்கு, நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் வந்து சென்ற வண்ணம் உள்ளனர். ஒவ்வொரு ஆண்டும் பங்குனி மாதத்தில், நரசிம்மர், அரங்கநாதர் மற்றும் ஆஞ்சநேயர் சுவாமி திருத்தேரோட்ட பெருவிழா கோலாகலமாக நடைபெறும். அதன்படி, இந்த ஆண்டின் திருத்தேர் பெருவிழாவானது கடந்த 4 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

அதனைத் தொடர்ந்து, கோயில்களில் திருமஞ்சனம், பல்லக்கு புறப்பாடு, சிம்ம வாகனம், அனுமந்த வாகனம், கருட வாகனம் திருவீதி உலா வரும் நிகழ்வு நடைபெற்றது. மேலும், சுவாமி தாயாருடன் சேஷ வாகனம் மற்றும் யானை வாகனத்தில் வீதியுலா வரும் நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

நாமக்கல் குளக்கரை நாமகிரி தாயார் திருமண மண்டபத்தில் வியாழக்கிழமை இரவு ஸ்ரீதேவி, பூதேவி தாயாருடன் நரசிம்மர், அரங்கநாதர் சுவாமி திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. அதன்பின், திருமாங்கல்ய தாரணம், இறைவனுக்கு மொய் சமர்ப்பித்து, மாங்கல்ய பொட்டு அளித்தல், பட்டு அங்கவஸ்திரம் அளித்தல், மணவறை அலங்காரம் உள்ளிட்டவற்றை பக்தர்கள் மேற்கொண்டனர். இரவில், குதிரை வாகனத்தில் வீதியுலா மற்றும் திருவேடுபரி உற்சவம் நடைபெற்றது.

திருத்தேரோட்டத்தின் முக்கிய நிகழ்வான நரசிம்மர் சுவாமி தேரோட்டம் சனிக்கிழமை காலை 9 மணிக்கு தொடங்கியது.

ஸ்ரீதேவி, பூதேவி சமேதராய் நரசிம்ம சுவாமி.

நாமக்கல் மக்களவை உறுப்பினர் வி. எஸ்.மாதேஸ்வரன், கோயில் அறங்காவலர் குழுத் தலைவர் கா.நல்லுசாமி மற்றும் உறுப்பினர்கள் செல்வசீராளன், ராமஸ்ரீனிவாசன், மல்லிகாகுழந்தைவேல், ரமேஷ்பாபு, மாநகராட்சி மேயர் து.கலாநிதி, துணைமேயர் செ.பூபதி, ஆணையர் ரா.மகேஸ்வரி கோயில் உதவி ஆணையர் இரா.இளையராஜா ஆகியோர் கலந்து கொண்டு தேரை வடம்பிடித்து இழுத்து தொடங்கி வைத்தனர்.

அதன்பிறகு கோவிந்தா கோஷம் முழங்க ஏராளமான பக்தர்கள் தேரை இழுத்தனர். தேரினுள் உற்சவ மூர்த்தியான நரசிம்மர் சுவாமி, ஸ்ரீதேவி, பூதேவி தாயார் பக்தர்களுக்கு காட்சியளித்தனர்.

நரசிம்மர் கோயில் முன்பிருந்து புறப்பட்ட தேர், ஆஞ்சனேயர் கோயில் வழியாக சென்று மீண்டும் நிலையை வந்தடைந்தது.

விழாவில் பங்கேற்ற பக்தர்களுக்கு அன்னதானம், நீர்மோர், பானாக்கரனம் உள்ளிட்டவை வழங்கப்பட்டது. தொடர்ந்து, மாலை 4.30 மணிக்கு, அரங்கநாதர் மற்றும் ஆஞ்சநேயர் கோயில் திருத்தேரோட்டம் நடைபெற உள்ளது.

கடைவீதி பகுதியை சுற்றி வந்த இரு தேர்களையும் திரளான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்.

திருத்தேரோட்டத்தையொட்டி, நாமக்கல் நகரில் போக்குவரத்து மாற்றியமைக்கப்பட்டிருந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வார பலன்கள் - மேஷம்

கரூர் பலி: சிபிஐ விசாரணை கோரிய மனு தள்ளுபடி

சாமுண்டி தசரா... ருக்மணி வசந்த் பகிர்ந்த காந்தாரா பட போஸ்டர்!

வார பலன்கள்: 12 ராசிகளுக்கும்!

தெய்வ தரிசனம்... எம பயம், செய்த பாவம் நீங்கும் திருசக்கரப்பள்ளி சக்ரவாகேஸ்வரர்!

SCROLL FOR NEXT