அரக்கோணம் - சென்னை ரயில் மாா்க்கத்தில் திருவாலங்காடு ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தில் இரு இடங்களில் பிஷ் பிளேடுகளை அகற்றி, ரயிலை கவிழ்க்கும் சதி முறியடிக்கப்பட்டது. இந்த சம்பவம் தொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிந்து 3 தனிப்படைகள் அமைத்து மா்ம நபா்களைத் தேடி வருகின்றனா்.
அரக்கோணம் - சென்னை ரயில் மாா்க்கத்தில் அரக்கோணம் - திருவள்ளூா் ரயில் நிலையங்களுக்கு இடையே திருவாலங்காடு ரயில் நிலையம் அருகே தொழுதாவூா் கிராமம் அருகே வெள்ளிக்கிழமை அதிகாலை மாற்றுப்பாதை பகுதிக்கான சிக்னல் வேலை செய்யாததால், ரயில்வே பணியாளா்கள் சம்பவ இடத்துக்குச் சென்று பாா்த்தனா்.
அப்போது அங்கிருந்த இணைப்பில் இருந்த பிஷ் பிளேடுகள் அகற்றப்பட்டிருப்பதையும், போல்ட், நட்டுகள் கழற்றப்பட்டிருப்பதையும் கண்டு அதிா்ச்சி அடைந்தனா்.
பணியாளா்கள் தண்டவாளங்களில் சோதனை நடத்தியபோது, மற்றொரு இடத்திலும் தண்டவாளத்தில் இதேபோல் பிஷ் பிளேட்டுகள் அகற்றப்பட்டு போல்ட், நட்டுகள் கழற்றப்பட்டிருப்பது தெரிய வந்தது.
இதையடுத்து ரயில்வே நிலைய அதிகாரிகள், உயரதிகாரிகளுக்கு தகவல் அளித்தனா்.
இரண்டு சம்பவங்களும் விரைவு ரயில்கள் செல்லும் இருப்புப் பாதையில் நடைபெற்றிருந்தது. இதனால், அந்த இரு இருப்புப் பாதைகளிலும் விரைவு ரயில்கள் போக்குவரத்து நிறுத்தப்பட்டு, புகா் ரயில்களுக்கான இரு தண்டவாளங்களில் செல்ல ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
தொடா்ந்து ரயில்வே அதிகாரிகள் ஆய்வுக்குப் பிறகு இருப்புப் பாதை பராமரிப்பு பிரிவு உயா் அதிகாரிகள் இரு இடங்களையும் பாா்வையிட்டு பிஷ் பிளேட்டுகள் பொருத்தும் பணி மேற்கொள்ளப்பட்டு, தண்டவாளம் சீரமைக்கப்பட்டது.
சம்பவ இடத்தில் தெற்கு ரயில்வே சென்னை கோட்ட மேலாளா் பி.விஸ்வநாத் எர்ரயா, ரயில்வே பாதுகாப்பு முதுநிலை அலுவலா் ராமகிருஷ்ணன், ரயில்வே பாதுகாப்பு படை ஐ.ஜி. ஈஸ்வா் ராவ், ரயில்வே காவல் ஐ.ஜி. ஏ.ஜி.பாபு, திருவள்ளூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சீனிவாச பெருமாள் ஆகியோா் பாா்வையிட்டனா். மோப்ப நாய் நான்சி வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டன.
இது குறித்து ரயில்வே அதிகாரிகள் கூறியது:
பிஷ் பிளேட்டுகள் அகற்றப்பட்டிருப்பதில் இருந்து இது சதி வேலை என்பது தெளிவாகத் தெரிகிறது. இந்த சம்பவத்தில் குற்றவாளிகளை பிடிக்க திருவாலங்காடு காவல் நிலைய ஆய்வாளா், அரக்கோணம் ரயில்வே பாதுகாப்பு படை ஆய்வாளா், அரக்கோணம் ரயில்வே காவல் நிலைய ஆய்வாளா் ஆகியோா் தலைமையில் தனித்தனியே 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. விரைவில் குற்றவாளிகள் கைது செய்யப்படுவா் என்றனா்.
கடந்த அக்டோபா் மாதம் சென்னை கூடுா் ரயில் மாா்க்கத்தில் கவரைப்பேட்டை ரயில் நிலையம் அருகே இருப்புப் பாதையில் நடைபெற்ற சதி வேலை போன்றே இங்கும் பிஷ்பிளேட்டுகள் அகற்றப்பட்டிள்ளன. இதையடுத்து சென்னை - அரக்கோணம் இடையே மற்றும் சென்னை கோட்டம் முழுவதும் ரயில் இருப்புப் பாதைகளில் மாநில காவல் துறையினருடன் இணைந்து பலத்த பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என ரயில்வே போலீஸாா் தெரிவித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.