காஸாவில் உணவின்றி பசியால் வாடும் குழந்தைகள் பேசுவதற்கு, அழுவதற்குக்கூட வலிமையில்லை என 'சேவ் தி சில்ட்ரன்' என்ற சர்வதேச தொண்டு நிறுவனத்தின் தலைவர் ஐ.நா.வில் பேசியுள்ளார்.
கடந்த 2023 அக்டோபர் மாதம் முதல் இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்தில் ஹமாஸ் அமைப்பினருக்கும் இடையே போர் நடந்துகொண்டிருக்கிறது.
இந்த போரின் இடையே காஸா மக்களுக்குத் தேவையான உணவு உள்ளிட்ட பொருள்களை ஐ.நா. உள்ளிட்ட அமைப்புகள் வழங்கி வந்த நிலையில் இஸ்ரேல் அதற்கு தடை விதித்ததால் அங்கு கடும் பஞ்சம் நிலவுகிறது.
உணவு கிடைக்காமல் குழந்தைகள் உள்பட பலரும் செத்துக்கொண்டிருக்கின்றனர். உணவு மையங்களை நோக்கிச் செல்லும் மக்களையும் இஸ்ரேல் ராணுவம் இரக்கமின்றி சுட்டு வீழ்த்துகிறது. மேலும் காஸாவின் பல்வேறு பகுதிகளிலும் தாக்குதல் நடத்தி வருகிறது.
காஸாவில் உணவு, மருத்துவம் இன்றி மக்கள் தவித்து வருவதாக கவலை தெரிவித்துள்ள ஐ.நா. அங்கு பஞ்ச நிலையையும் அறிவித்துள்ளது.
இந்த பஞ்சம் இயற்கைப் பேரிடரால் உருவானதல்ல, முழுக்க முழுக்க மனிதா்களால் உருவாக்கப்பட்டது என்றும் இதனை உடனடியாக நிறுத்த முடியும் என்றும் ஐ.நா. கூறியுள்ளது.
இந்நிலையில் 'சேவ் தி சில்ட்ரன்' என்ற சர்வதேச தொண்டு நிறுவன அமைப்பின் தலைவர் ஆஷிங், காஸாவில் குழந்தைகளின் நிலை குறித்து ஐ.நா. கூட்டத்தில் பேசியுள்ளார்.
அவர் கூறியதாவது:
காஸா பகுதியில் பசியால் வாடும் குழந்தைகள் மிகவும் பலவீனமாக உள்ளனர். அவர்களுக்கு அழுவதற்குக்கூட வலிமை இல்லை. பசியில் இருந்தும் பெரும்பாலான குழந்தைகள் அழுவதில்லை. பேசுவதும் இல்லை.
கடந்த வாரம் காஸாவில் பஞ்ச நிலை என்று ஐ.நா. அறிவித்தது வெறும் வறட்சியான தொழில்நுட்ப சொல் அல்ல.
போதுமான உணவு இல்லாதபோது குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாடு உள்ளவர்களாக மாறுகிறார்கள். உணவு இல்லாதபோது உடல், உயிர்வாழ்வதற்கு உடலில் உள்ள கொழுப்பையே உட்கொள்கிறது. கொழுப்பு கரையும்பட்சத்தில் அடுத்து தசைகள் மற்றும் முக்கிய உறுப்புகளை சாப்பிட ஆரம்பிக்கிறது. படிப்படியாக அவர்கள் உடல் வலிமை இழந்து வலியுடன் இறக்கிறார்கள். ஆனால் அதனை 'பஞ்சம்' என்று சாதாரணமாகச் சொல்கிறோம்.
அங்கு மருத்துவமனைகளும் அமைதியாக இருக்கின்றன. குழந்தைகளுக்குப் பேசவோ அல்லது வேதனையில் அழவோகூட வலிமை இல்லை. அவர்கள் மெலிந்து படுத்தே இருந்து உயிரிழக்கின்றனர்.
இந்த அறையில் உள்ள அனைவருக்கும் இந்தக் கொடுமையைத் தடுக்க வேண்டிய சட்டப்பூர்வ மற்றும் தார்மீகப் பொறுப்பு உள்ளது என்று கூறினார்.
சர்வதேச மனிதாபிமானச் சட்டத்தின் கீழ் பட்டினியை போர் ஆயுதமாகப் பயன்படுத்துவது தடைசெய்யப்பட்டுள்ளது. காசாவில் பஞ்சம் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்று ஐ.நா. தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
இதையும் படிக்க | காஸாவில் பட்டினிச் சாவு 300-யை எட்டியது! 117 பேர் குழந்தைகள்!!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.