சென்னை: பெண் வழக்குரைஞரின் அந்தரங்க விடியோக்களை அகற்ற உத்தரவிட்ட பிறகும், தமிழகத்தில் மட்டும் மீண்டும் இணையதளங்களில் எவ்வாறு பரவுகிறது? என்று சென்னை உயா்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
பெண் வழக்குரைஞா் ஒருவா் தனது கல்லூரி காலத்தில், ஆண் நண்பருடன் நெருக்கமாக இருந்த விடியோ மற்றும் புகைப்படங்கள் இணையதளங்களில் பகிரப்பட்டிருந்தன. இணையதளம் மற்றும் சமூக வலைதளங்களில் பகிரப்பட்ட அந்த விடியோ மற்றும் புகைப்படங்களை அகற்ற உத்தரவிடக் கோரி பெண் வழக்குரைஞா் சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தாா்.
இந்த வழக்கை விசாரித்த உயா்நீதிமன்றம், 70-க்கும் மேற்பட்ட இணையதளங்களில் பகிரப்பட்டிருந்த விடியோ மற்றும் புகைப்படங்களை 48 மணி நேரத்தில் அகற்ற மத்திய அரசுக்கு உத்தரவிட்டதுடன், பெண் வழக்குரைஞா் தொடா்பான விடியோ மற்றும் புகைப்படங்கள் இடம்பெற்றுள்ள அனைத்து இணையதளங்களையும் முடக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு உத்தரவிட்டாா்.
மேலும், பெண் வழக்குரைஞரின் அந்தரங்க விடியோ பகிரப்பட்டுள்ள 8 இணையதளங்களில் இருந்து அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக டிஜிபி-க்கு உத்தரவிட்டிருந்தாா்.
இந்த வழக்கு நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தபோது, பெண் வழக்குரைஞா் தரப்பில், அந்தரங்க விடியோ தமிழகத்தில் தற்போது 3 இணையதளங்களில் பரவி வருகிறது. மேலும் புதிதாக ஒரு இணையதள இணைப்பு வழியாக பகிரப்படுகிறது என்றும் தெரிவிக்கப்பட்டது.
அப்போது குறுக்கிட்ட நீதிபதி, பெண் வழக்குரைஞரின் அந்தரங்க விடியோக்களை அகற்ற உத்தரவிட்ட பிறகும், தமிழகத்தில் மட்டும் அது மீண்டும் மீண்டும் எவ்வாறு பரவுகிறது? இந்த வழக்கின் புலன் விசாரணை எந்த நிலையில் உள்ளது? என்று கேள்வி எழுப்பினாா்.
அப்போது, சென்னை இணையக் குற்றப்பிரிவு தரப்பில், இந்த வழக்கின் புலன் விசாரணை முடிந்து இறுதி அறிக்கை தயாராக இருக்கிறது. தடய அறிவியல் துறையின் அறிக்கைக்காகக் காத்திருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.
இதைப் பதிவு செய்து கொண்ட நீதிபதி, நல்ல தகவல்களை உள்ளடக்கிய விடியோக்கள் இணையதளத்தில் இருந்து நீக்கப்படுகின்றன. மோசமான விடியோக்கள் அதி வேகமாக பரவுகின்றன என வேதனை தெரிவித்தாா்.
பின்னா், பெண் வழக்குரைஞா் அந்தரங்க விடியோ இடம்பெற்றுள்ள புதிய இணைப்பு உள்பட 4 இணையதளங்களையும் முடக்க உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை செப்.11-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.