காஞ்சிபுரம்: டிட்வா புயல் காரணமாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை முதல் பரவலாக மிதமான மழை பெய்தது. இதன் காரணமாக, மக்களின் இயல்பு வாழ்க்கை 3 ஆவது நாளாக பாதிக்கப்பட்டது.
வங்கக் கடலில் உருவான டிட்வா புயல் காரணமாக, காஞ்சிபுரம் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை மிதமான மழை விட்டுவிட்டு பெய்தது. இதனைத் தொடர்ந்து இரண்டு நாள்களாக காஞ்சிபுரம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
செவ்வாய்க்கிழமை நள்ளிரவு 12 மணி முதல் தொடர்ச்சியாக தற்போது வரை மழை பெய்து வருகிறது. குளிர்ச்சியான சூழல் நிலைவிய நிலையில், தொடர் மழையால் வீடுகளை விட்டு மக்கள் வெளியே வரமுடியாமல் முடங்கி இருந்தனர். மக்கள் நடமாட்டம் இல்லாததால் மாவட்டத்தின் பல்வேறு முக்கிய சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டது. இதே நிலை, 3 ஆவது நாளாக புதன்கிழமையும் தொடர்கிறது. இதனால் மக்கள் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
தொடர் மழையால் கடந்த 24 மணி நேரத்தில் காஞ்சிபுரத்தில் 33 மில்லி மீட்டரும், உத்திரமேரூரில் 37 மில்லி மீட்டரும், வாலாஜாபாத்தில் 51 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.
செம்பரம்பாக்கம் ஏரிக்கு தொடர் நீர்வரத்து அதிகரித்து வருவதால் செம்பரம்பாக்கம் அணையின் பாதுகாப்பு கருதி புதன்கிழமை காலை 8 மணி முதல் 200 கன அடி வெளியேற்றப்பட்டு வருகிறது. நீர்வரத்து மேலும் அதிகரித்தால் வெளியேற்றப்படும் நீரின் அளவு அதிகரிக்கப்படும் என செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.
முழு கொள்ளளவை எட்டிய 24 ஏரிகள்
காஞ்சிபுரம் மாவட்டத்தில் பெய்து வரும் தொடர்மழை காரணமாக, காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஊரக உள்ளாட்சித் துறை சார்பில் கண்காணிக்கப்படும் 378 ஏரிகளில் 24 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளது. 74 ஏரிகள் 75 சதவீதத்தை தாண்டி உள்ளது. மேலும் முக்கிய ஏரிகளான தாமல், உத்திரமேரூர், பிள்ளைப்பாக்கம் உள்ளிட்ட ஏரிகள் முழு கொள்ளளவை ஏற்றியுள்ளது.
பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
தொடர் மழை காரணமாக, மாவட்டத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்ட நிலையில், தொழிற்சாலைகளில் பணிபுரியும் ஊழியர்கள் மற்றும் அரசு, தனியார் ஊழியர்கள் பேருந்துகளில் பயணிப்பவர்களின் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது. காய்கறி வரத்து சீராக உள்ளதால் விலையேற்றம் இல்லாமல் இருந்தாலும் மழை காரணமாக, மக்கள் வருகை குறைவாக இருப்பதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.