புகழ்பெற்ற தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் ஏ.வி.எம் சரவணன் மறைவுக்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், காங்கிரஸ் முன்னாள் மக்களவை உறுப்பினர் சு. திருநாவுக்கரசர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
வயது மூப்பு மற்றும் உடல்நலக் குறைவால் ஏ.வி.எம். சரவணன்(86) சென்னையில் அவரது இல்லத்தில் வியாழக்கிழமை அதிகாலை 5 மணியளவில் காலமானார்.
அவரது மறைவுக்கு திரையுலகினர், அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
அன்புமணி ராமதாஸ் சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,
தமிழ்த் திரையுலகின் பிதாமகர்களில் ஒருவராக போற்றப்படும் ஏ.வி.மெய்யப்பச் செட்டியார் புதல்வரும், புகழ்பெற்ற தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளருமான ஏ.வி.எம். சரவணன் வயது மூப்பு காரணமாக சென்னையில் காலமானார் என்ற செய்தியறிந்து அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்.
திரைப்படத் தயாரிப்பில் தந்தைக்கு உதவியாக இருந்து செயல்பட்ட ஏ.வி.எம். சரவணன், தந்தைக்கு பிறகு ஏவிஎம் நிறுவனத்தை தலைமையேற்று நடத்தினார். தமிழ்த் திரையுலகில் பல புதுமைகளை புகுத்துவதற்கு காரணமாக இருந்தவர், ஏராளமான கலைஞர்கள் தமிழ்த் திரையுலகில் நுழைவதற்கு காரணமாக இருந்தவர்.
எம்.ஜி.ஆர், கலைஞர், ஜானகி அம்மையார், ஜெயலலிதா, என்.டி.ஆர் ஆகிய 5 முதல்வர்களுக்கு நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தவர். எங்கள் இல்ல விழாக்களில் பங்கேற்றவர். அமைதி, அடக்கம், எளிமை ஆகியவற்றுக்கு பெயர் பெற்றவர். இந்தியத் திரைப்படக் கூட்டமைப்பின் தலைவர், அகில உலகத் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத் துணைத்தலைவர், தமிழ்நாடு சுற்றுலா வாரியத்தின் பண்பாட்டுக் கழக இயக்குநர், சென்னை மாநகர செரீப், ஆகிய பொறுப்புகளை வகித்துள்ளார். தமிழக அரசின் கலைமாமணி விருது உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றவர்.
பெரியவர் ஏ.வி.எம். சரவணன் இழந்து வாடும் அவரது குடும்பத்தினர், நண்பர்கள், ஏவிஎம் நிறுவனப் பணியாளர்கள், திரையுலகினர் உள்ளிட்ட அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
திருநாவுக்கரசர்(காங்கிரஸ்)
இந்திய திரைத் துறையின் மிகவும் பழமையான திரைப்பட தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றாக விளங்கும் ஏ. வி. எம். பிக்சர்ஸ் நிறுவனத்தை உருவாக்கிய அமரர் ஏ. வி.மெய்யப்ப செட்டியாரின் புதல்வர்களில் ஒருவரும், அந்நிறுவன பங்குதாரருமான ஏவி.எம்.சரவணன் இயற்கை எய்தினார் எனும் செய்தி அறிந்து மனம் மிக வருந்துகிறேன்.
முன்னணி நடிகர்களை வைத்து தமிழ், தெலுங்கு, இந்தி என பல மொழிகளில் திரைப் படங்களை தயாரித்த நிறுவனம் ஏ.வி.எம். பிக்சர்ஸ். ஏ.வி.எம். சரவணன் தங்களது திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தின் நிர்வாக ரீதியாக பல்வேறு பொறுப்புகளை கவனித்து வந்ததோடு, இந்திய திரைப்பட கூட்டமைப்பின் தலைவர் பொறுப்பையும் கவனித்துள்ளார். தமிழக அரசின் கலைமாமணி விருது, புதுவை அரசின் சிகரம் விருது என விருதுகளை பெற்றவர். பழகுவதற்கு இனியவர், மிகச் சிறந்த பண்பாளர்.
இவரது மறைவு அவரது குடும்பத்தினருக்கு மட்டுமின்றி, திரைத் துறைக்கும் பேரிழப்பாகும். அன்னாரின் மறைவிற்கு எனது ஆழ்ந்த இரங்கலை துயருடன் தெரிவித்துக் கொள்கிறேன். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் கலையுலகினர் ஆகியோருக்கு எனது ஆழ்ந்த அனுதாபத்தை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன் என கூறியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.