மும்பை: வலுவான மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி, பணவீக்கம் குறைந்துள்ளதன் காரணமாக, வங்கிகளுக்கான குறுகிய காலக் கடனுக்கான ரெப்போ வட்டி விகிதம் 0.25 சதவீதம் குறைத்து இந்திய ரிசர்வ் வங்கி(ஆர்பிஐ) அறிவித்துள்ளது.
இது 2025-26 நிதியாண்டில் நான்காவது வட்டி குறைப்பு. இதுவரை 1.25 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது.
மும்பையில் வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் கடனுக்கு விதிக்கப்படும் வட்டி விகிதம் (ரெப்போ வட்டி) குறித்து இரு மாதங்களுக்கு ஒருமுறை இந்திய ரிசர்வ் வங்கி கூடி முக்கிய முடிவுகள் எடுக்கும்.
அந்த வகையில், ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா தலைமையில் டிசம்பர் 3 முதல் 5 வரை நடைபெற்ற மூன்று நாள் நாணயக் கொள்கைக் குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி, வங்கிக்களுக்கான குறுகிய காலக் கடனுக்கான ரெப்போ வட்டி விகிதத்தை 0.25 சதவீதம் குறைப்படுவதென ஒருமனதாக முடிவெடுக்கப்பட்டது. அதன்படி, வங்கிகளுக்கான குறுகிய காலக் கடனுக்கான ரெப்போ வட்டி விகிதம் 0.25 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளதாக இந்திய ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா தெரிவித்தார்.
இது குறித்து சஞ்சய் மல்ஹோத்ரா கூறியதாவது:
வளர்ந்து வரும் பெரிய பொருளாதார நிலைமைகள் மற்றும் எதிர்காலக் கண்ணோட்டம் குறித்து இரு மாத நாணயக் கொள்கை கூட்டத்தில் விரிவாக ஆலோசிக்கட்டது. அதன்படி, வலுவான மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி, பணவீக்கம் குறைந்துள்ளதன் காரணமாக, வங்கிகளுக்கான குறுகிய காலக் கடனுக்கான ரெப்போ வட்டி விகிதத்தை 0.25 சதவீதம் குறைக்கப்பட்டு 5.25 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் குறுகிய கால கடன்களுக்கான ரெப்போ வட்டி விகிதம் 5.50 சதவீதத்தில் இருந்து 5.25 சதவீதமாக குறைந்துள்ளது.
ரெப்போ விகிதம் 25 அடிப்படைப் புள்ளிகள் குறைக்கப்பட்டு தொடர்ந்து இரண்டு முறை ரெப்போ விகிதம் 5.5 சதவீதமாக மாற்றமில்லாமல் இருந்து வந்த நிலையில், தற்போது இந்த குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் ரிசர்வ் வங்கி தனது நிலைப்பாட்டை நடுநிலையாகவே வைத்திருப்பதாக மல்ஹோத்ரா தெரிவித்தார்.
கடந்த ஆறு காலாண்டுகளில் இல்லாத அளவுக்கு இரண்டாம் காலாண்டில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) 8.2 சதவீதமாக உயர்ந்துள்ளது. மேலும், சில்லறை பணவீக்கம் அக்டோபரில் 0.25 சதவீதம் என்ற நிலைக்குக் குறைந்துள்ளதால், வட்டி விகிதத்தைக் குறைக்கும் முடிவை ரிசர்வ் வங்கி எடுத்துள்ளது. முதல் அரையாண்டில் வளர்ச்சி 8 சதவீதம் மற்றும் பணவீக்கம் 2.2 சதவீதமாக இருப்பது, ஒரு "நிலையான சிறந்த பொருளாதாரம்" என்றும், முன்னதாக கணிக்கப்பட்ட நடப்பு நிதியாண்டுக்கான சில்லறை பணவீக்க விகிதம் 2.6 சதவீதத்தில் இருந்து 2 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.
2025-26 நிதியாண்டுக்கான மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி கணிப்பு 6.8 சதவீதத்தில் இருந்து 7.3 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
மூன்றாம் காலாண்டு மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 7 சதவீதமாகவும், நான்காம் காலாண்டு 6.5 சதவீதமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. 2026-27 ஆம் நிதியாண்டின் முதல் காலாண்டு வளர்ச்சி 6.7 சதவீதமாகவும், இரண்டாம் காலாண்டு வளர்ச்சி 6.8 சதவீதம் என்ற விகிதத்தில் இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
பணப்புழக்கத்தை சரிசெய்யும் வசதியின் கீழ் எஸ்.டி.எஃப். விகிதம் 5 சதவீதமாகவும், எம்.எஸ்.எஃப் மற்றும் வங்கிக் கடன் விகிதம் 5.5 சதவீதமாகவும் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
மேலும், பணப்புழக்கத்தை அதிகரிக்கும் விதமாக, அரசுப் பத்திரங்களை ரூ.1 லட்சம் கோடிக்கு வாங்குதல் மற்றும் 5 பில்லியன் டாலர்-ரூபாய் மாற்று நடவடிக்கையை இந்த மாதம் மேற்கொள்ள ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளது.
வரும்காலங்களில் விவசாயத் துறைகளில் ஏற்படும் வாய்ப்புகள், ஜிஎஸ்டி சீராக்கத்தின் தாக்கம், மிதமான பணவீக்கம், நிறுவனங்களின் இருப்புநிலைக் குறிப்புகள் மற்றும் பணவியல் மற்றும் நிதி நிலைமைகள் போன்ற உள்நாட்டு காரணிகள் பொருளாதார நடவடிக்கைகளை தொடர்ந்து ஆதரிக்கும் என்றும், தொடர்ச்சியான சீர்திருத்த முயற்சிகள் வளர்ச்சியை மேலும் எளிதாக்கும் என்றும் மல்ஹோத்ரா கூறினார்.
ரெப்போ வட்டி விகிதம் குறைக்கப்பட்டுள்ளதால் வீடு மற்றும் வாகனக் கடன் வாங்கியுள்ளவர்களுக்கும், வாங்கத் திட்டமிட்டுள்ளவர்களுக்கும் மகிழ்ச்சி அளிக்கும் விதமாக வட்டி விகிதம் குறைக்கப்படலாம் எனவும், தனிநபர் கடனுக்கான வட்டி விகிதம் குறைவதற்கான வாய்ப்புகள் குறைவுதான் என கூறப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.